(நெவில் அன்தனி)
எனது சதத்தைவிட அணியின் வெற்றியே எனக்கு முக்கியம் என ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 5 ஓட்டங்களால் சதத்தைத் தவறிவிட்ட 28 வயதான ஜனித் லியனகே தெரிவித்தார்.
ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 209 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 49 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
தனது 2ஆவத சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜனித் லியனவே அனுபசவாலிபோல் துடுப்பெடுத்தாடி டக்வேர்த் லூயிஸ் முறைமையைக் கருத்தில் கொண்டு ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 95 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரது இந்தத் திறமை அவருக்கு ஆட்டநாயகன் விருதை வென்றுகொடுத்தது.
அப் போட்டியில் 5 ஓட்டங்களால் கன்னிச் சதம் தவறவிடப்பட்டது குறித்து போட்டிக்கு பின்னரான ஊடக சந்திப்பில் கேட்டபோது,
'நான் சதம் பெறுவதை விட எமது அணியின் வெற்றியே முக்கியம். மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் நான் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது மீண்டும் சிறு மழை தூற ஆரம்பித்தது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் எமது அணி 5 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் அது எமக்கு பாதிகமாக அமைந்து விடும் என அறிந்திருந்தேன். எனவே டக்வேர்த் லூயிஸ் முறைமையில் எமது அணி முன்னிலை அடைய அந்த ஓவரில் எமக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது எனது சதத்தைவிட அணியின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் சதம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் இறுதியில் எமது அணி வெற்றிபெற்றதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
'நாங்கள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்கள் சரிந்தன. மழைபெய்து ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பந்தின் நகர்வு சற்று அதிகரித்திருந்தது. ஸிம்பாப்வே அணியில் 2 சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அவர்களை சிறப்பாக எதிர்கொண்டு சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் கடைசிவரை என்னால் துடுப்பெடுத்தாட முடியும் என எனது உள்மனம் கூறியது. அதனை நிறைவேற்றக் கிடைத்தது.
'நான் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளூர் போட்டிகளில் திறமையாக விளையாடினால் தேசிய அணியில் இடம்பிடித்து அங்கு திறமையை வெளிப்படுத்த முடியும் என எண்ணினேன். இன்று (நேற்று) நான் துடுப்பெடுத்தாடியபோது திறமையை வெளிப்படுத்தி இந்த நாளை எனதாக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். எமது அணி வெற்றிபெறுமானால் அதுவே மிகப்பெரிய விடயம் என நான கருதினேன். அந்த வெற்றியில் எனது பங்களிப்பு தாராளமாக இருந்தது என நினைக்கிறேன்' எனவும் அவர் கூறினார்.
தேசிய அணியில் இடம்கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஜனித் லியனகேவிடம் கேட்டபோது,
'கழகமட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வந்ததுடன் கடந்த இரண்டு அத்தியாயங்களிலும் நான் தொடர் நாயகன் விருதுகளை வென்றெடுத்தேன். நடப்பு கிரிக்கெட் பருவகாலத்திலும் நான் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளேன். கழக மட்டத்தில் என்னால் சாதிக்க முடியுமானால் வாய்ப்பு கிடைத்தால் தேசிய அணியிலும் என்னால் முடியும் என நினைத்தேன். அதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாடியபோது வீரர்கள் எனக்கு அளித்த ஒத்துழைப்பு எனக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்தது. தற்போதைய அணி தொடர்ச்சியாக விளையாடினால் இதனைவிட பெரிய விடயங்களை சாதிக்க முடியும் என நான் நினைக்கிறேன்' என பதிலளித்தார்.
இலங்கை அணியைப் பற்றி பேசிய ஜனித் லியனகே,
'எமது அணியைப் பொறுத்தமட்டில் இளம் வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதேபோன்று அனுபவசாலிகளும் இருக்கின்றனர். என்னைப் போன்ற புதிய வீரர்களும் இருக்கின்றனர். எங்களைப் பொறுத்தமட்டில் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒரு போட்டியின்போது இவ்வாறான சூழ்நிலை ஏற்படக்கூடும். போட்டி ஒன்றில் எந்தவொரு அணியிலும் 2 அல்லது 3 துடுப்பாட்ட வீரர்கள்தான் அதிக ஓட்டங்களைப் பெறுவார்கள். இன்றைய தினம் மேகமூட்டத்துக்கு மத்தியில் பந்தின் நகர்வு அதிகரித்தது. ஸிம்பாப்வே அணியும் சிறந்த அணி. அந்த அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் அவர்கள் எம்மைவிட முன்னிலையில் இருந்ததால் எமக்கு இலகுவாக அமையவில்லை. துரதிஷ்டவசமாக எமது விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. ஆனால், வெற்றிபெறவேண்டும் என்ற மனோநிலையிலேயே நாங்கள் இருந்தோம்.
'போட்டிகளில் விளையாடும்போது சிறுசிறு தவறுகள் நேரக்கூடும். எமது அணியைப் பொறுத்தமட்டில் சிறந்த அணியாகும். நம்பிக்கையுடன் விளையாடினால் இதனைவிட சிறப்பாக விளையாடக்கூடியதாக இருக்கும். ஸிம்பாப்வே ஒரு சிறந்த அணி. வருங்காலத்தில் அதனைவிட சிறந்த அணிகளுடன் விளையாடவுள்ளோம். எமது அணி இன்னும் சிறப்பாக விளையாடினால் வெற்றிபெற முடியும்' எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM