(எம்.சி.நஜிமுதீன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றுது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. ஆகவே இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. எனினும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. இரு காரணங்களை அடிப்படையாகக்கொண்டே நாம் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மேலும் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் சிலருக்கு உரிய முறையில் அழைப்பு கிடைக்கவில்லை. குறித்த காரணங்களினால்தான் நாம் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சமல்ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்புகொண்ட கட்சியாகும். அக்கட்சியை அதன் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் உரிய முறையில் பாதுக்கத்து மக்கள் மயப்படுத்தியுள்ளனர்.

ஆனால் தற்போது அவ்வாறு பாதுகாக்கப்பட்ட கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆளுகைக்குட்பட்டுள்ளது. அதனை நாம் அனுமதிக்கப்போவதில்லை. ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறோம். 

மேலும் தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் அரசாங்கத்தால் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. அக்கால எல்லையின் பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர்.

ஆகவே இவ்வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.