உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கினால் அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை வலய நிர்மாண பணிகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இவ்வருடம் அதிகளவிலான முதலீடுகள் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் தற்போது பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்ட வண்ணமுள்ளன.

ஹோட்டல்கள் அதிகளவில் கொழும்பு நகரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியின் போது கசினோ விடுதி அமைக்க திட்டமிட்ட லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்புள்ள இடத்தில் பாரிய ஹொட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளன. அத்துடன் சிங்கப்பூர் நாட்டின் பிரபல நிறுவனமான சாபாவும் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது. 

மேலும் ஜேர்மன், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐப்பான் ஆகிய நாடுகள் பல்வேறு விதமான முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் திறந்த அழைப்பின் பேரில் கடந்த வருடத்தில்  அதிகளவிலான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். எனினும் முதலீட்டு சபையின் கணிப்பின் பிரகாரம் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகளவிலான முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டை வலயத்திற்கான பணிகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கினால் தாமதம் அடைந்துள்ளன. வழக்கு நிறைவடைந்தவுடன் ஆரம்பிக்க முடியும்.

அத்துடன் முதலீட்டு சபையினால் அங்கீகாரம் அளிக்கப்படும் பல்வேறு முதலீடுகள் அரச நிறுவனங்களினாலும் அமைச்சுக்களினாலும் தாமதிக்கப்படுவதனால் பல்வேறு சிரமங்களை முதலீட்டாளர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே இதற்கு பூரண ஒத்துழைப்பினை அரச நிறுவனங்கள் எமக்கு அளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.