உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள் : மகஜரைக் கையளித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை 

Published By: Vishnu

07 Jan, 2024 | 07:52 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தமரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.  

அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி; மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், நேற்று முன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது. 

அதன்போது ஜனாதிபதியிடத்தில், “சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன்,  அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார். 

அதேநேரம்,  ‘மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்’ எனும் தலைமையில் உள்ள குறித்த மகஜரில்,

இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை. தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போரினாலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.

வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது.

நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக  14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.ர்ஊஃ3861ஃ2007) வழக்கை எதிர்கொண்டு '15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்'  என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாககக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும்  அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவது மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15