துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 தன்னை இழிவுப்படுத்தவும், பயமுறுத்தவும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வதந்திகளாகவும், எனக்கெதிரானதாகவும் வெளியிடப்படுகின்றது. 

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நபர் எந்த வகையிலும் என்னுடன் தொடர்புடையவர் கிடையாது. 

என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் குற்றமற்றவர்.  இதேவேளை இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள் உண்மையான குற்றவாளியை விரைவில் கைதுசெய்வார்கள் என நான் நம்புகின்றேன். குற்றவாளி கைதுசெய்யப்படும் பட்சத்தில் உண்மையை அனைவரும் அறியக்கூடியதாக இருக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  அப்போது நானும் மேலதிக தகவல்களை பெறுவதற்கு குறித்த இடத்துக்கு சென்றேன்.

இதன்போது பொலிஸார் என்னிடமும் விசாரணைகளை மெற்கொண்டனர். நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். 

இதன்போது என்னை கைதுசெய்வதற்கான  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் பொலிஸாருக்கு தகவல்கள் தேவைப்படுமாயின் அவர்களுக்கு என் முழுமையான ஆதரவினை வழங்குவேன்.

இதேவேளை சிலர் அமைப்பாக இணைந்து என்னை பயமுறுத்தவும் , இழிவுப்படுத்தவும் முற்படுகின்றனர். குறித்த விடயம் சைட்டம் நிறுவனத்துக்கும் பாதகத்தன்மை ஏற்படுகின்றது.

இதனால் குறித்த சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் விசாரணைகள்  நிறைவடையும் வரையில் விடுமுறையளிக்குமாறு நான் சைட்டம் நிறுவனத்தின் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானித்தேன்.

இதேவேளை பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற பதவியிலிருந்து தற்காலிகமாக இராஜினாமா செய்ய  தீர்மானித்துள்ளேன். எனினும் சில ஊடகங்கள் குறித்த விடயத்தினை வேறு விதமாக சித்தரித்து செய்திகளை வெளியிடுகின்றன.

அதுமாத்திரமின்றி எனக்கு எதிராக செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் எனது கல்வித்தகுதிகள் தொடர்பில் பொய்யான வதந்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் ரஸ்யாவில் உள்ள பிரபல வைத்தியக்கல்லூரியொன்றில் வைத்திய பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளளேன். அங்கு அனைத்து பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளேன்.

எனது வைத்திய பட்டப்படிப்பானது இலங்கை வைத்திய சபையில் மட்டுமல்ல, உலக வைத்திய துறையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.

அதுமாத்திரமின்றி நான் இலங்கை வைத்திய சபையின் 16 ஆவது சட்டத்தின் கீழ் நடத்தப்படும் பரீட்சையில் ஒன்பது தடவை தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

நான் ஒன்பது தடவைகள் இலங்கை வைத்திய சபையின் 16 ஆவது சட்டத்தின் கீழ் நடத்தப்படும் பரீட்சையில் அமர்ந்ததும் இல்லை. அமர வேண்டிய அவசியமும் எனக்கு இருக்கவில்லை.

எனது வைத்திய பட்டப்படிப்பு இலங்கை வைத்திய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆகவே தான் நான் வைத்தியராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.