உரிய சட்ட செயன்முறைகள் பின்பற்றப்படாமை சட்ட நடைமுறைக் கட்டமைப்புக்கள் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் - சட்டத்தரணிகள் சங்கம்

Published By: Digital Desk 3

06 Jan, 2024 | 09:14 PM
image

(நா.தனுஜா)

சொத்துக்களை அழித்தல் உள்ளடங்கலாக பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் சோதனை செய்வதற்கான செல்லுபடியாகும் உத்தரவுகளின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதன்விளைவாக சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள செயன்முறைகள் மீறப்படுவதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தகர்க்கப்படுகின்றது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பொலிஸார் அவர்களது செயற்பாடுகளுக்காகப் பொறுப்புக்கூறச்செய்யப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்பில் கருத்திற்கொள்ளப்படாமையும் எந்தவொரு நபரும் பாதுகாப்பாக உணரமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளின்போது உரிய சட்ட செயன்முறைகள் பின்பற்றப்படவில்லை என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை வெளியிட்டுவரும் நிலையில், இதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

அண்மையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழப்பதற்கும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைவதற்கும் வழிகோலிய வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினரை கைதுசெய்வதற்காகச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய செயன்முறையைப் பின்பற்றுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் மிகையான அவசியத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

சொத்துக்களை அழித்தல் உள்ளடங்கலாக பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் சோதனை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு மற்றும் செல்லுபடியாகும் உத்தரவுகளின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதன்விளைவாக சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள செயன்முறைகள் மீறப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளை மழுங்கடிப்பது மாத்திரமன்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களின் நேர்மைத்தன்மை தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் தகர்க்கின்றது.

அரசியலமைப்பின் 13(4) ஆவது சரத்தின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவின்றி எந்தவொரு நபருக்கும் மரணதண்டனையோ அல்லது சிறைத்தண்டனையோ வழங்கமுடியாது. குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்குக்கூட சட்டரீதியான நடைமுறைகள் தவிர்ந்த ஏனைய தன்னிச்சையான வழிகளில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்புப்பெறும் உரிமை இருக்கின்றது.

சட்டவிரோத படுகொலைகளும், தன்னிச்சையான கைதுகளும் அதிகாரத்துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான அபரிமிதமான வாய்ப்பை அளிக்கின்றது. எனவே இவ்வாறான மிகமோசமான மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நாம் அமைதியாக இருந்தால், எம்முடைய கூட்டுப்பாரம்பரியம் கேள்விக்குள்ளாக்கப்படும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினருக்கும் உரியவாறான நீதி நிலைநாட்டப்படக்கூடியவகையில் சகல அதிகாரிகளும் முற்றுமுழுதாக சட்டத்துக்கு அமைய செயற்படவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று சில சட்டத்தரணிகளை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் இணைந்து சதியில் ஈடுபடுபவர்கள் போன்று சித்தரிக்கும் வகையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தும் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

பொலிஸார் அவர்களது செயற்பாடுகளுக்காகப் பொறுப்புக்கூறச்செய்யப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்பில் கருத்திற்கொள்ளப்படாமையும் எந்தவொரு நபரும் பாதுகாப்பாக உணரமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும். எனவே சட்ட நடைமுறைகளுடன் தொடர்புடைய சகல தரப்பினரும் பொறுப்புக்கூறச்செய்யப்படுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதையும், அனைத்து நபர்களினது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உடனடியாக உறுதிப்படுத்தவேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அவற்றுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யுமாறும், நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24
news-image

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

2025-01-21 15:18:46
news-image

19 நாட்களில் ஒரு இலட்சத்து 50...

2025-01-21 14:25:01
news-image

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை...

2025-01-21 14:36:14
news-image

பலத்த மழையினால் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில்...

2025-01-21 14:05:01