(நா.தனுஜா)
இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருட்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு செயற்படவேண்டாம் என்று வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல் அமுலுக்குவரும் பெறுமதிசேர் வரி (வற்வரி) விதிப்பு உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இம்மறுசீரமைப்புக்கள் பற்றியும், நாடு என்ற ரீதியில் நாம் பயணிக்கவேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததுடன், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதில்கூட நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம்.
குறிப்பாக வருமானத்தை அதிகரிப்பது எப்படி? செலவுகளைக் குறைப்பது எப்படி? வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவது எப்படி? என்ற கேள்விகளே மிகமுக்கிய சவாலாக இருந்தது. அதனையடுத்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வரி அறவீடுகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டோம்.
அதேபோன்று அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி சகல அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினோம். நாட்டில் வரிவருமானத்தை சேகரிக்கும் பிரதான கட்டமைப்புக்களான வருமானவரித்திணைக்களம், சுங்கத்திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களம் என்பன வரி அறவீடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தன.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் பாராளுமன்ற மேற்பார்வைக்குழுக்களும் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்கின.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஆனால் அதனை முன்னிறுத்தி நாம் மிகவும் வலுவான அடித்தளத்தை இட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.
குறிப்பாக கடந்த காலங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டதைப்போன்ற 3 மடங்கு நிதி 2024 இல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம். எனவேதான் செலவினங்களைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை அரசுக்கு இருப்பினும், இவ்வாறான சமூகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 இலிருந்து 2023 க்கு நகர்ந்ததை விட, 2023 இல் இலிருந்து 2024 க்கு ஓரளவு சிறந்த நிலையிலேயே நகர்கின்றோம்.
இப்பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு நாம் காரணமாக இல்லாத நிலையில், எதற்காக வரி செலுத்தவேண்டும் என எனது மகன் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இருப்பினும் தற்போது நாடு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்கு நாமனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டியது அவசியமாகும்.
அது மிகக்கடினமானதாக இருந்தாலும், அதனைச் செய்தேயாகவேண்டும். அதேபோன்று தாம் செலுத்தும் வரிப்பணம் உரியவாறு செலவிடப்படுகின்றதா எனப் பொதுமக்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கின்றது. அந்நிதி முறையான விதத்தில் செலவிடப்படுவதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
முன்னர் பெறுமதிசேர் வரிக்குள் உள்வாங்கப்பட்டிருக்காத பொருட்கள் இம்முறை அதில் உள்வாங்கப்பட்டிருப்பினும், இதுபற்றி நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம்.
அதேவேளை சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருட்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு செயற்படவேண்டாம் என்று வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெறுமதிசேர் வரி மூலமான வருமானத்தை 2.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்துவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
வருமான வீழ்ச்சியே இப்பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே மிகமோசமான நோய்க்கு முகங்கொடுத்திருந்த எமது நாட்டுக்கு இப்போது அவசியமான மறுசீரமைப்புக்கள் மூலம் சத்திரசிகிச்சை செய்திருக்கின்றோம்.
அதிலிருந்து நோயாளியால் (நாட்டினால்) உடனடியாக மீளமுடியாது. ஆனால் இதிலிருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனைச் சாதிக்கமுடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM