பாதையோரம் வாகனத்தினால் அடிபட்டு உயிரிற்கு போராடிய நாயொன்றை, சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த அகதி சிறுவன் ஒருவர், அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது, சிரிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துருக்கியிற்கு அகதியாக வந்த  ஹுசேன் எல் ஹசன்  என்ற சிறுவன்,  பாதையோரம் வாகனம் ஒன்றில் அடிப்பட்டு, நகரமுடியாமல் உயிரிற்கு போராடிய நாயிற்கு அடைக்கலம் கொடுத்ததோடு, நாயை மீட்பு குழு மீட்டு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பாதுகாத்துள்ளார்.

மேலும் குறித்த நாய் குளிரால் அவதிப்படவே, சிறுவன் தமது வீட்டிற்கு கொடுக்கப்பட்ட போர்வைகளை எடுத்து வந்து, நாயை போர்த்தி சூடாக வைத்திருந்ததோடு, விலங்குகள் நல காப்பகத்திற்கும் அறியப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் மீட்பு குழுவினர் வரும் வரை குறித்த நாயுடன், தலையை சாய்த்து பேசியுள்ள சிறுவன், மீட்பு குழுவினர் நாயை கொண்டு சொல்லும் வரை குறித்த சம்பவ இடத்திலேயே நின்றுள்ளார்.

இருப்பினும் குறித்த நாய் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும், ஆனால் குறித்த சிறுவனின் செயற்பாட்டை அங்கிருந்த கண்காணிப்பு கெமரா மூலம் கவனித்துள்ள , அகதிகள் மையம் அமைத்துள்ள நகரத்தின் பிரதி மேயர், சிறுவனின் வீட்டிற்கு சென்று அவனின் மனிதநேயத்தை பாராட்டியுள்ளதோடு, அவனது குடும்பத்தாருக்கு போர்வைகள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து பாராட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.