(நா.தனுஜா)
உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சித்திரவதைக்கு எதிரான இலங்கை ஒன்றியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நபரொருவரைக் கைது செய்து தன்னிச்சையாகத் தடுத்துவைத்து, சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அதற்குப் பொறுப்பாளிகளான தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு தமது சொந்தப்பணத்தில் தலா 5 இலட்சம் ரூபாவை நட்டஈடாக செலுத்தவேண்டும் எனவும் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனையடுத்து தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராகப் பதவி வகிக்கக்கூடாது என வலியுறுத்தி சித்திரவதைக்கு எதிரான இலங்கை ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கட்டமைக்கப்பட்ட விதத்திலும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் மிகமோசமாக நடத்துதல் போன்றவற்றின் பின்னணியில், வழக்கொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நாம் விசேட அவதானம் செலுத்தியிருக்கின்றோம். பொலிஸ் திணைக்களத்துக்குள் நிலவும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கையின் கடந்தகால மற்றும் தற்கால அரசாங்கங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்பதை இத்தீர்ப்பு மீள நினைவுறுத்தியிருக்கின்றது.
இலங்கை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்தின் பிரகாரம் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பதுடன், அவ்வுரிமையைப் புறக்கணிக்கமுடியாது எனவும் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே யுத்தம் உள்ளிட்ட எந்தவொரு அவசர நிலைமையாக இருந்தாலும், சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமையைக் கட்டுப்படுத்தவோ அல்லது மட்டுப்பாடு விதிக்கவோ முடியாது. மாறாக அனைத்து அரச அதிகாரிகளும் அவ்வுரிமையைப் பாதுகாத்து, மேம்படுத்தவேண்டுமென உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பானது தேசபந்து தென்னகோன் மிகமோசமான சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், சட்டமா அதிபரும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். உடனடியானதும், வலுவானதுமான நடவடிக்கையின் மூலமே சித்திரவதைகளை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தவும், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பவும் முடியும்.
அதேவேளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆற்றிய உரையில் தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபரென வலியுறுத்திக் கூறியமை தொடர்பில் மிகுந்த கரிசனையடைகின்றோம். இலங்கைப் பிரஜையொருவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நபரொருவரை அரச கட்டமைப்பின் உயர்பதவியில் வைத்திருப்பதை எந்தவொரு நடவடிக்கை மூலமும் நியாயப்படுத்தமுடியாது. சித்திரவதைகளுக்கு எதிராகக் குரலெழுப்பும் முதல் நபராக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இருக்கவேண்டும் என்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு என்பது சித்திரவதைகளுக்கு உட்படாதிருப்பதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரச பதவிகளை வகிப்பவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கக்கூடியவகையில் செயற்படவேண்டும் என்ற கோட்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறும், உயர்நீதிமன்றத்தீர்ப்பில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக பதில் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து விலகுமாறும் தேசபந்து தென்னகோனிடம் வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி அவரைப் பதவி நீக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளைப் பாராளுமன்றம் முன்னெடுக்கவேண்டும். மேலும இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM