இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அரசியல் தீர்வைக் காண்பதற்கான செயற்பாடுகள் இன்றிய நிலையில் வெறும் வாக்குறுதிகள் மட்டுமே அரசாங்க தரப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய வாக்குறுதிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் விரக்தி நிலையையும் ஏற்படுத்தி வருகின்றன. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமென்றும் பொறுப்புக் கூறல் விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிய இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அழுத்தங்களை வழங்கி இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் கானல் நீராக மாறியுள்ளன.
இதனால் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் பெரும் ஏக்கத்துடன் காலத்தை கழிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அதேபோன்று பொறுப்புக்கூறல் விடயத்தில் அக்கறை செலுத்தப்படுமென்று முன்னாள் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியிருந்தார். ஆனால் இந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறப்பட முடியாத அதிகாரத்தை மாகாணங்களுக்குள் வழங்கும் வகையில் அரசியல் தீர்வு யோசனை உள்ளடங்கிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது நல்லாட்சி அரசாங்கத்தின் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் பொது எதிரணியான பொதுஜன பெரமுனவின் கடும் எதிர்ப்பு என்பனவற்றின் காரணமாக இந்த முயற்சியும் இடைநடுவில் கைவிடப்பட்டது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தையே அழித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்.
பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இத்தகைய அழைப்புக்களை விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் சர்வகட்சி குழுக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது சர்வகட்சி குழுக் கூட்டம் ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூட்டங்களின் போது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதன் அவசியம் தொடர்பில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
பாராளுமன்றமே இந்த விடயம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் கடந்த 21ஆம் திகதி மீண்டும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அதன் கீழான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிக்காட்ட வேண்டுமென்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.
நல்லெண்ணம் என்ற போர்வையில் இனியும் ஏமாற முடியாது என்றும் எனவே, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் சம்பந்தன் எடுத்துக் கூறியிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது மாகாண சபைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அடுத்த பாராளுமன்றத்தில் ஒருவருட காலத்துக்குள் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதி வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அதற்கான ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக கோரி வருகின்றார். ஆனாலும் அரசியல் தீர்வு குறித்து பேசுவதற்கோ அல்லது அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கோ தெற்கில் இனவாத சிங்களத் தலைமைகள் விரும்பவில்லை. அதற்கு எதிரான செயற்பாட்டிலேயே இத்தகைய இனவாத தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
பதுளையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும் தற்போது நிறைவேற்றப்பட வேண்டிய பிரதான கடமைகளாகவுள்ளன.
எனவே, எந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளை நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருக்கின்றார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை கோரி வருகின்றார். ஆனால் அதற்கான ஒத்துழைப்புக்கள் கிடைப்பதாக தெரியவில்லை. தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் முக்கியமான இரு பணிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளமை யதார்த்தபூர்வமான கருத்தாகவே அமைந்திருக்கின்றது.
உண்மையிலேயே நாடு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமானால் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கக் கூடாது. இத்தகைய முரண்பாடுகள் நீடிக்குமானால் அது நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு எந்தவகையிலும் உதவப் போவதில்லை.
கடந்த 3 தசாப்த காலமாக நாட்டில் நிலவிய யுத்தத்தின் கோர விளைவுகளையே தற்போது நாம் அனுபவித்து வருகின்றோம். நாடு பெரும் அதல பாதாளத்துக்குள் வீழ்வதற்கு இந்த யுத்தம் பெரும் காரணமாக அமைந்திருந்தது.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் யுத்தத்தின் விளைவுகளே காரணமாக அமைந்திருக்கின்றன. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதுடன் இனங்களுக்கிடை யிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட்டால்தான் சகல சமூகங்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இதன்மூலம்தான் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் வெற்றிகொள்ள முடியும்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதைப் போன்று பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் தீர்வு விவகாரத்திலும் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியதே இன்றைய தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM