வவுனியாவில் இன்று (01) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வவுனியா பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள்  பாலாமைக்கல் வீதியில் திருப்ப முயன்றபோது மன்னார் வீதியில் வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் எதிரே மோதி விபத்திற்குள்ளாகியது.

இதையடுத்து வவுனியா வீதியிலிருந்து மன்னார் வீதி நாலாம் கட்டைக்கு நெல் கொள்வனவு செய்வதற்காக பின்னால் சென்ற கன்டர் ரக வாகனம் விபத்திற்குள்ளாகி நடு வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளது. 

இந்நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பாலாமைக்கல் வீதிக்கு மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றபோது படுகாயமடைந்த எஸ். குமார் (வயது 28) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து சம்பவத்தையடுத்து நெளுக்குளம் பொலிஸார், வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்துக்குள்ளான  இரு மோட்டார் சைக்கிளையும், கன்டர் வாகனத்தில் ஏற்றி பொலிஸார் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.