(எம்.மனோசித்ரா)
உலகின் பல நாடுகளிலும் கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இதன் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக பிரதான வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் எந்த மாதிரியிலும் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே ஜே.என்.-1 பிறழ்வினால் ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வாறிருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 22ஆம் திகதி கொவிட்-19 வைரஸின் மாறுபாடாக ஜே.என்.-1 பிறழ்வு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டும் என்றும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதனால் ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், இந்த துணை வகை மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பிற சுவாச நோய்கள் அந்த பகுதிகளை பாதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஜே.என்.-1 பிறழ்வு இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது .
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு , சுகாதார அமைச்சானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகத்துடன் கலந்தாலோசித்து, 19 பிரதான மருத்துவமனைகளில் சுவாச நோய்களின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜே.என்.-1 பரவும் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக, சிறப்பு கவனம் செலுத்தி, தொழில்நுட்ப அறிவுறுத்தல்களின்படி, முக்கிய மருத்துவமனைகளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. எந்த மாதிரியிலும் கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்படவில்லை
எனவே, தற்போதைய தரவுகளின்படி, கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 இலங்கையில் தொற்றுவதற்கான ஆபத்து மிகக் குறைவாகும். நிபுணர்களின் ஆலோசனையின்படி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க , மூடிய , காற்றோட்டம் அற்ற, நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணிவது , அடிக்கடி கைகளைக் கழுவுதல் , இடைவெளியைப் பேணுதல் , இருமல் மற்றும் தும்மல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுதல் என்பவற்றின் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக வைத்தியர்களை அணுக வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM