உலகத் தமிழர் பேரவையும் பெளத்த பிக்குகளை அங்கத்துவமாக கொண்ட சிறந்த இலங்கைக்கான சங்க மன்றமும் ஒன்றிணைந்து தயாரித்த இமயமலை பிரகடனத்துக்கு எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது. சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பினர், இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்பினர், மதத்தலைவர்கள் உட்பட்டோர் இந்த பிரகடனத்துக்கு தமது எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றத்தை சேர்ந்த பெளத்த தேரர்களும் கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போது நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக ஆறு அம்சங்களைக் கொண்ட இமயமலை பிரகடனத்தை தயாரித்திருந்தனர். அண்மையில் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனின் தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்து சிறந்த இலங்கைக்கான சங்க மன்றத்தை சேர்ந்த பெளத்த பிக்குகளுடன் ஒன்றிணைந்து அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தமது பிரகடனம் தொடர்பில் கலந்துரையாடியிருந்ததுடன் இதற்கான ஒத்துழைப்பையும் கோரியிருந்தனர்.
இந்த நிலையில்தான் இமயமலை பிரகடனத்தை கண்டித்தும் உலகத் தமிழர் பேரவையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத இமயமலைப் பிரகடனத்தை வடக்கு, கிழக்கை மையமாக கொண்ட தமிழ் சமூக அமைப்புக்கள், வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மதத்தலைவர்கள் கூட்டாக நிராகரித்திருக்கின்றனர்.
இமயமலைப் பிரகடனமானது தமிழ் மக்களின் கருத்துக்களையோ இலங்கைத் தீவு சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தினால் அனுபவித்த துன்பங்கள், கொடுமைகளையோ கருத்தில் கொள்ளாமை அதிருப்தி அளிக்கின்றது என்று இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேபோன்றே உலகத் தமிழர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த பெளத்த தேரர்கள் ஊடான முயற்சியை முழுமையாக நிராகரிப்பதாகவும் அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் 16 புலம் பெயர் அமைப்புக்களின் கூட்டான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிவித்துள்ளது.
இது குறித்து குறித்த அமைப்பு விடுத்த அறிக்கையில், பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அறைகுறையான தீர்வு தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழித்த தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதி வழங்குவதுடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண சர்வதேசம் உதவ வேண்டும் என்றும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட்ட மேலும் ஐந்து புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து உலகத் தமிழர்பேரவையின் செயற்பாட்டை கண்டித்திருந்ததுடன் இமயமலை பிரகடனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இவ்வாறு வடக்கு, கிழக்கை சேர்ந்த அமைப்புக்களும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் இமயமலை பிரகடனத்துக்கு தமது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கின்றன.
ஆனாலும் இமயமலை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட சில நல்ல விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இமயமலை பிரகடனத்தில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகாரப்பகிர்வும் பொறுப்புக்கூறலும் இருக்கின்றது. இந்தப் பிரகடனத்தை நான்கு மகாநாயக்க தேரர்களும் ஏற்று அனுமதித்திருக்கின்றார்கள். இது நல்லதொரு விடயம் என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
மகாநாயக்க தேரர்கள் இந்தப் பிரகடனத்தை வரவேற்று தங்களுடைய ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். ஆகவே ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் இவை இரண்டும் இருக்கின்ற பிரகடனத்தை நான்கு மாநாயக்கத் தேரர்களும் ஏற்று அனுமதித்திருக்கிறார்கள் என்பது முக்கிமான விடயம் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்தப் பிரகடனம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷ உட்பட்டோரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இதனைவிட சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற குழுவிடமும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட்டோரிடமும் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இந்தப் பிரகடன முயற்சியை வரவேற்றுள்ளதுடன் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், உட்பட்டவர்களும் இதற்கு தமது ஒத்துழைப்புக்களை நல்குவதாக கூறியிருக்கின்றனர். தெற்கில் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் சிவில் சமூக அமைப்பினர் என பெரும்பான்மையானோர் இந்த முயற்சிக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.
ஆனால் புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் வடக்கு, கிழக்கை சேர்ந்த சிவில் சமூக மதத் தலைவர்கள் பலரும் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கின்றனர்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை உலகத் தமிழர் பேரவையின் ஒரு சில உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியாது என்று விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரவையின் இமயமலைப் பிரகடனம் தொடர்பில் தெற்கின் சிங்களத் தலைமைகள் மற்றும் பெளத்த பீடங்கள் என்பன சாதகமான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளமையானது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகவே அமைந்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் அது சிங்கள பெரும்பான்மையின மக்களின் ஆதரவுடனேயே சாத்தியமாகும். சிங்கள பெரும்பான்மையின மக்கள் தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் இழுத்தடிக்கப்பட்டதாகவே அமையும்.
அரசியல் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலைமை நாட்டில் காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனவரி மாதம் அரசியல் யாப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு நான்கு பெளத்த பீட மகாநாயக்கர்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குக்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் 13ஆவது திருத்த நகலையும் எரியூட்டியிருந்தனர்.
இந்த எதிர்ப்புக்கள், மற்றும் போராட்டங்களை அடுத்து 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விடயம் முற்றுப்பெறவில்லை. பொலிஸ் அதிகாரமற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்புடன் அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பில் உள்ள விடயத்தை கூட அமுல்படுத்துவதற்கு முடியாதுள்ள நிலையில் அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய இனப்பிரச்சினை தீர்வுக்கு தெற்கின் தலைமைகள் இணங்குமா என்ற கேள்வி எழுகின்றது.
இவ்வாறான நிலையில் சுமந்திரன் எம்.பி.யின் கூற்றின்படி ஒற்றையாட்சியற்ற தீர்வுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் நான்கு மகாநாயக்க தேரர்களும் இணக்கம் தெரிவித்துள்ளமை உண்மையிலேயே முன்னேற்றகரமான விடயமாகவே காணப்படுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழி வகைகள் குறித்து நாம் தற்போதைய நிலையில் ஆராயவேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அந்தவகையில் உலகத் தமிழர் பேரவையின் இந்த முயற்சி முன்னேற்றகரமான நடவடிக்கை என்றே எண்ணவேண்டியுள்ளது.
இமயலை பிரகடனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கருத்து தெரிவிக்கையில், இது வரவேற்கத்தக்கதெனினும் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக அரசியலமைப்பு ரீதியான தீர்வே அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு ரீதியாகவே காணப்படவேண்டும். அதற்கு சிங்கள மக்களின் இணக்கத்தை பெறவேண்டியதும் அவசியமாக உள்ளது.
இதற்கேற்ற வகையில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் புலம்பெயர் தமிழர் அமைப்பினரும் வடக்கு, கிழக்கை சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துரையாடி ஒன்றிணைந்த திட்டமொன்றுக்கு வரவேண்டியது அவசியமாகும். இதனைவிடுத்து ஒருவரின் செயலை மற்றையவர் எதிர்ப்பதானது எந்தவகையிலும் நன்மை பயர்க்கப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM