இன ஐக்கியத்துக்காகவே நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும் - சிறுபான்மை தரப்பினரிடம் நீதி அமைச்சர் கோரிக்கை

Published By: Vishnu

24 Dec, 2023 | 02:19 PM
image

ஆர்.ராம்

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தினை உறுதிப்படுத்தி சிறந்தவொரு இலங்கையை கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரியிடம் தெரிவித்தார்.

அத்துடன், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த் தரப்புக்கள் உட்பட அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் முழுமையான ஆதரவினை வழங்குமாறு பகிரங்கமாக கோருவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜனவரியில் ஆணைக்குழு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்டமூல வரைவு தயாரிப்பு மற்றும் அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் எதிர்காலத்தை கருதி மிக முக்கியமான சட்ட வரைவொன்றை தயாரித்து வருகின்றோம். குறிப்பாக, இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

அதன் அடிப்படையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அச்சட்டமூலத்துக்கான வரைவு எதிர்வரும் ஜனவரி மாதம் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் சட்டமூலம் தொடர்பில் அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் கேட்டறிந்து அவசியம் ஏற்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இந்தச் செயற்பாடானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இனங்களுக்கு இடையில் நீடித்துக்கொண்டிருக்கும் முரண்பாடுகளை களைவதற்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பம் ஒன்றாகவே பார்க்கின்றேன்.

விசேடமாக எதிர்கால சந்ததியினர் உள்நாட்டில் தமது எதிர்காலம் தொடர்பில் சந்தேகங்களைக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானதொரு பணி முன்னெடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்தச் செயற்பாட்டுக்கு விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி, முஸ்லிம், மலையக கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், இதுகால வரையிலும் எந்தவொரு ஆட்சியாளரை பாதுகாக்கின்ற வகையிலோ அல்லது இனக்குழுமத்தை, தனிநபர்களை இலக்குவைத்து சட்ட வரைவுகளைச் செய்ததில்லை. எதிர்காலத்திலும் அதனைச் செய்யப்போவதில்லை.

ஆகவே, வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட முடியும். அவற்றை ஆராய்ந்து சட்டமூலத்தின் தேவை ஏற்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றுவதற்கு தயாராகவே உள்ளேன்.

அதுமட்டுமன்றி, கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அச்சமயத்தில் நேர்மறையான பிரதிபலிப்புக்களே கிடைத்துள்ளன. யாரும் எதிர்த்திருக்கவில்லை.

ஆகவே, தொடர்ச்சியான காலத்தில் இந்த விடயத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் பங்கேற்புடன் ஒத்துழைப்புக்களை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-07-16 06:09:41
news-image

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில்...

2024-07-16 02:52:10
news-image

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை...

2024-07-16 02:46:11
news-image

தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வை முன்வைப்பதற்கு...

2024-07-16 02:37:44
news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44