தற்போதைய சூழலில் ஒரு குழந்தை பிறக்கும் போது ஆரோக்கிய சவாலுடன் பிறப்பது அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மருத்துவத்துறை மேற்கொண்டுள்ளது. அதிலும் சயனாட்டிக் அட்டாக் என்ற பாதிப்புடன் பிறக்கும் குழந்தையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காப்பாற்றுவது என்பது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் தற்போது அதற்கு நவீனசிகிக்சை வந்துவிட்டது.

குழந்தைகளுக்கான இதய வால்வு பிரச்னையில் சிக்கலானதாகக் கருதப்படுவது இரத்த குழாய்கள் இடம் மாறி இருப்பதுதான். இதனால் இடது, வலது பக்க அறைகள் ஒன்றாக இணைந்து ஒக்சிஜன், கார்பன் டை-ஒக்ஸைடு கலந்த சுத்த-அசுத்த இரத்தம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதய இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது இதய மருத்துவத்தில் "சயனாட்டிக்' எனப்படும். இது போன்ற குழந்தைகள் "ப்ளூ பேபி' என்றும் அழைக்கப்படுவர்.  

இந்த பிரச்னை குழந்தைக்கு இருப்பது கருவில் கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்வதையே மருத்துவர்கள் முதற்கட்ட அறிவுரையாக வழங்குவர். இருப்பினும் குழந்தை பிறந்த பிறகு கண்டறியப்பட்டாலும் 80 சதவீத குழந்தைகளை சத்திரச் சிகிச்சை மூலம் நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது உள்ளன. "ப்ளூ பேபி' பிறந்ததும் உடனடியாக சத்திரச் சிகிச்சை செய்ய வேண்டும். எனினும் இரத்தத்தில் ஒக்சிஜனின் அளவைப் பொருத்தும், குழந்தையின் உடல் நிலையைப் பொருத்தும் சிறிது தள்ளிப் போடவும் இயலும். 

இந்நிலையில் எல்லா பெற்றோர்களும் இதனை முன்கூட்டி அறிய இயலுமா? என்கிறார்கள். இது மட்டுமல்ல, எல்லா குழந்தைகளுக்கு இதய நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. தாயின் வயிற்றில் கரு உருவான 18ஆவது நாளில் இருந்து இதயத் துடிப்பு தொடங்கும். இது 55 நாள்களுக்குள் முழு வளர்ச்சி அடைந்து விடும். எனவே கரு உருவான 16ஆவது வாரத்தில் பீட்டல் எக்கோ பேடல் எக்கோ என்ற பரிசோதனையை மேற்கொண்டால் குழந்தையின் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து 99 சதவீதம் அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் மிகச் சிறிய பிரச்னைகளை இதன் மூலம் அறிய முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே சமயத்தில்  குடும்பத்தில் யாருக்கேனும் இதய பாதிப்பு இருந்தாலோ, ஏற்கெனவே பிறந்த குழந்தைக்கு இதய பாதிப்பு இருந்தாலோ, கர்ப்ப காலத்தில் அதிக மருந்துகள், மது சாப்பிட்டிருந்தாலோ தாய்க்கு சர்க்கரை நோய், ருபேலா அம்மை, நெருங்கிய உறவில் திருமணம், போலிக் ஆசிட் பற்றாக்குறை இருந்தாலோ இந்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

டொக்டர் தேவபிரசாத்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்