இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நாம் மிகுந்த போட்டித் தன்மையுடனும் நம்பிக்கையுடனும் விளையாடி போட்டியில் வெற்றிபெற முயற்சிசெய்வோமென பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்தார்.

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் திறமையாக செயற்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் முதலாம் நிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வெள்ளையடிப்புச் செய்திருந்தது.

எவ்வாறு இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான இந்தத் தொடரை அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிபெறுவதற்கு முயற்சிசெய்வோம்.

இதேவேளை, எதிரணிக்கு எதிராக போட்டியின் 5 நாட்களும் நாம் மிகுந்த போட்டித் தன்மையுடனும் நம்பிக்கையுடனும் விளையாடும் போது இறுதியில் போட்டியின் முடிவு எமக்கு சாதகமாக அமையலாம் என பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.