நிலவுக்கு சுற்றுலா மேற்கொள்ளுவதற்கு விரும்பிய இருவர், அதற்காக முன் கொடுப்பனவுகளை மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமானது, விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வணிக நிறுவனமாகும். குறித்த நிறுவனத்தினுடாக இரண்டு அமெரிக்கர்கள் நிலவு வரை பயணம் செய்வதற்கு, முன் கொடுப்பனவுகளை செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனமானது 2018 ஆம் ஆண்டில் நிலவை சுற்றிவருவதற்கு, குறித்த இரண்டு பேரையும் சுற்றுலாவாக அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் குறித்த திட்டம் பற்றி விளக்கியுள்ள எலோன் முஸ்க், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஒத்துழைப்புடனே திட்டம் சாத்தியப்படவுள்ளதாகவும், மேலும் இதற்க்கு முன் மனிதர்கள் சென்றிராத வேகத்திலும், தூரத்திலும் குறித்த சுற்றப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இருவரின் விபரங்களை வெளியிடாத ஆய்வு நிறுவனமானது, விண்வெளி சுற்றுலாப் பயண தூரம் சுமார் 3 இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் மைல்களாக இருக்குமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.