இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு அரவிந்த டிசில்வாவுடன் இணைந்து அரைச்சதந்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்நிலையில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியில் இடம்பிடித்திருந்த குருசிங்கவுக்கு தேசபந்து விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த காலங்களில் அசங்க குருசிங்க, அவுஸ்திரேலியாவில் தரம் 3 ஆம் நிலை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அனுபவத்தையும் அண்மைக்காலமாக அவுஸ்திரேலிய பிராந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அசங்க குருசிங்க, இலங்கை வந்தடைந்ததும் எதிர்வரும் 7 ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கெதிராக ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனது கடமையை பெறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அசங்க குருசிங்கவின் நியமனம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில்,

உண்மையில் ஒரு தேசம் ஒரு அணி என்ற எமது நோக்கத்தின் அடிப்படையின் கீழ் செயல்படவுள்ளமை வரவேற்கத்தக்கது. திறமையானவர்களை உள்ளீர்ப்பதன் மூலம் நாங்கள் எமது வளத்தை அதிகரிப்பதுடன் தேசியமட்டத்தில் நல்லதொரு குறிக்கோளை அடையமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக ரஞ்சித் பெர்னாண்டோ செயற்பட்டு வருவதுடன் இவரும் அண்மையில் தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.