இலங்கையிலிருந்து லெபனான் சென்று தமது விசா நிறைவடைந்த நிலையில், பணிபுரிந்து வருபவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

லெபனாலில் சட்ட அனுமதிகள் முடிவடைந்த நிலையில் பணி புரிந்து வரும் இலங்கையர்களை , பொது மன்னிப்பின் கீழ் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு லெபனான் அரசு சம்மதித்துள்ளது.  

இரு நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட, இலங்கை வெளிவிவகார அமைச்சின் விசேட செயற்திட்டத்திற்கமைய, லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஆர்.கே. விஜய்ரத்ன மெண்டிஸ் மற்றும் அந்நாட்டின் குடிவரவு மற்றும் வெளிவிவகார அமைச்சர் இப்ரஹாம் அப்பாஸ் ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற  விசேட பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லெபனான் அரசானது 2004, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொது மன்னிப்புகளை வழங்கியிருந்த நிலையில், அநேகமான இலங்கையர்களை எவ்வித சட்ட நடவடிக்கையுமின்றி திருப்பி அனுப்பியிருந்தது.

இந்நிலையில் குறித்த பொதுமன்னிப்பு காலத்தில், லெபனாலில் சட்ட அனுமதி இன்றி தங்கியுள்ள சுமார் 400 புலம் பெயர் தொழிலார்கள், எவ்வித கைது நடவடிக்கையுமின்றி இலங்கை திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது