பின்னாலே ஒரு பிரச்சினை!

14 Dec, 2023 | 07:14 PM
image

‘முதுகெலும்பு இல்லாதவர்’ என்று ஒருவரை இன்னொருவர் ஏசுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். எதற்கும் லாயக்கில்லாதவர் என்ற அர்த்தத்திலேயே இவ்வாறு ஏசுவார்கள். இதிலிருந்தே, முதுகெலும்பு எத்தனை முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 

இதயம், மூளை, சிறுநீரகம் போன்று, முதுகெலும்பை நாம் லட்சியம் செய்வதில்லை. ஆனால், உடல் என்ற இந்த மாளிகையைத் தாங்கிப் பிடித்திருப்பதென்னவோ முதுகெலும்புதான். இன்னும் சொல்வதானால், முதுகெலும்பின் ஆரோக்கியத்திலேயே ஏனைய உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது. முதுகெலும்பில் வளைவோ அல்லது வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலோ, நிச்சயமாக மற்றைய உறுப்புகளும் பாதிக்கப்படும்.

சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், உலகளவில் பத்துக்கு ஒன்பது பேர் முதுகு வலிக்கு ஆளாவதாகத் தெரியவந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தற்காலத்தில், நீண்ட நேரம் அமர்ந்திருந்து பணியாற்றுவதுதான்.

அதைவிட முக்கியமான காரணம், அலைபேசியை கழுத்தை வளைத்து அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பது. தலையை எவ்வளவு தூரம் குனிகிறீர்களோ, அதற்கேற்ற எடையை உங்கள் முதுகெலும்பு தாங்க ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். முடிந்த வரையில், கண்களுக்கு நேராக அலைபேசியை வைத்துப் பயன்படுத்த முயற்சியுங்கள்.

உட்கார்வது என்பது ஓய்வெடுப்பது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில், உட்கார்தல் ஒரு வித வேலைதான். உடல் மேற்பகுதியை நீண்ட நேரம் தாங்கிப் பிடிக்கும் பணியை முதுகெலும்பு செய்துகொண்டிருக்கிறது. 

நமது உடல் அவயவங்களின் இயக்கத்துக்கு தசைகள் முக்கியம். உட்கார்ந்திருக்கும்போது, தசைகள் ஓய்வு பெறுவதில்லை. மாறாக, எந்தவித வேலையும் இல்லாததால், தசைகள் தம் ஒட்டுமொத்த சுமையையும் முதுகெலும்பில் வைத்துவிடும்.

இதற்கிணையானதுதான் நாம் போதியளவு நீர் அருந்தாமையும். நமது அவயவங்களுக்குப் போதுமானளவு நீர் கிடைக்காவிட்டாலும் அது முதுகெலும்பையே தாக்குகிறது. எனவே, முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குப் பின்வருவனவற்றைச் செய்யவேண்டும்.

முதலாவது, நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பது. தவிர்க்க முடியாத சூழலாக இருந்தால், குறைந்தது அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறையாவது சற்று நடைபயிற்சி செய்வது அவசியம். இதன்மூலம், தமது சுமையை முதுகெலும்பில் வைத்திருக்கும் தசைகள், சற்று இயங்க ஆரம்பிக்கும். இதனால், அவற்றின் ஒட்டுமொத்த சுமை, நீண்ட நேரத்துக்கு முதுகெலும்பில் சுமத்தப்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.

அடுத்தது, நாம் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோமோ, அதற்கு ஏறக்குறைய இணையான நேரம் நாம் உடற்பயிற்சியில் அல்லது உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். 

சரி, உங்கள் முதுகெலும்பு ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? கழுத்தில் ஆரம்பித்து, கை வரையோ, பின்முதுகில் இருந்து கால்கள் வரையோ வலி ஏற்பட்டால், அதை முதுகெலும்பு பாதிப்பின் முதல் அறிகுறியாகக் கொள்ளலாம்.

அடுத்து, வழமைக்கு மாறாக அடிக்கடி இயற்கை அழைப்புகளுக்கு நேரம் ஒதுக்குவதும் ஒரு அறிகுறிதான். இதனுடன், நடையில் சீரற்ற நிலை அல்லது தள்ளாட்டம் தோன்றுவதும் முக்கியமான ஒரு அறிகுறிதான். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனே வைத்தியர் ஒருவரை அணுகுவது அவசியம்.

முதுகெலும்புப் பாதிப்புகளுக்கு அதிகமாக முகங்கொடுப்பது பெண்கள்தாம். தம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளாமை மற்றும் மாதவிடாய் நிற்பது போன்றன முதுகெலும்பு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சரியான உணவு வகைகள், உடல் அசைவுகள், உடற்பயிற்சிகள், அதிக நேரம் அமர்ந்திருக்காமை என்பன மூலம் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தள்ளிப்போடவோ, தவிர்க்கவோ முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-17 17:34:21
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52
news-image

லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பாதிப்பிற்குரிய...

2025-04-16 03:48:16
news-image

கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

2025-04-13 12:52:03
news-image

கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

2025-04-12 17:37:22
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் அதியுயர் வெப்பநிலை...

2025-04-11 16:30:48
news-image

பாடாய் படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட...

2025-04-10 14:24:20
news-image

பற்களின் பாதுகாப்புக்கு இப்படி செய்யுங்கள்

2025-04-09 15:21:33
news-image

சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதை

2025-04-09 13:36:35