(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உர ஒப்பந்தம் மூலம் வழங்க வேண்டிய 6.9 மில்லியன் டொலர் தொகையை இராஜதந்திர பிரச்சினையாக்கியது தவறு. அரசாங்கம் தனது பொறுப்பை சரியான முறையில் செய்ய தவறியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது. அதனால் இது தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை பயன்படுத்தி, இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று செவ்வாய்கிழமை (12) எழுப்பிய கேள்விக்கு, விவசாயத் துறை அமைச்சர் பதிலளித்த பின்னர், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உர ஒப்பந்தம் மூலம் வழங்க வேண்டிய 6.9 மில்லியன் டொலர் தொகையை இராஜதந்திர பிரச்சினையாக்கியது தவறு. காப்புறுதியாளர்களது காலத்தை நீட்டிக்க தவறியது மற்றும் முற்பணமாக எந்தவித காப்புறுதியும் இல்லாமல் நிதியை விடுவித்தமை என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு சீனா பொறுப்பல்ல. இதனை இராஜதந்திர பிரச்சினையாக முன்வைத்து சமரச தீர்வு நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம். இந்த விவகாரம் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் கூறினாலும், ஏன் முன்வைக்கவில்லை என கேட்கிறேன்.
அத்துடன் பத்தலேகொட விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 11 வருடங்கள் 22 பருவங்களாக நடத்திய ஆய்வில் சேதன உரங்களை பயன்படுத்துவதன் மூலம் அறுவடை 21 முதல் 31 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தும், இரசாயன மற்றும் சேதன உரங்கள் இரண்டின் கலவையிலும் அதிக அறுவடை பெற முடியும் என்று கண்டறியப்பட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையை செயலாளர் ஹபுஹின்ன உட்பட மேலும் பல அதிகாரிகள் இணைந்து அப்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
இவ்வாறான அறிக்கைகள் இருந்தும், சேதன உரங்களை நாடியதால், நாடு பெருமளவு பணத்தை இழந்தது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சு மட்டத்தில் குழு அறிக்கை தயாரிக்கப்படும் என பொறுப்பான அமைச்சர் தெரிவித்த போதிலும், தகுந்த தகைமை கொண்ட கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை பயன்படுத்தி இதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.
பொட்டாசியம் குளோரைட் எனும் இரசாயன உரம் இந்நாட்டு விவசாயிகளுக்கு சேதன உரமாக விநியோகிக்கப்பட்டாலும், விவசாயிகளின் கைகளில் காயங்களுடன் உடல்நலப் பிரச்சினைகள் எழும் காரணத்தினால், இடைக்காலக் குழு அறிக்கைகளைத் தயாரிக்காமல் முழுமையான கணக்காய்வு அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நனோ உர ஊழல் மோசடி மூலம் இந்தியாவில் இருந்து சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை விசாரணையோ அல்லது கணக்காய்வோ மேற்கொள்ளப்படவில்லை. நனோ உர ஊழல் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் இரண்டாவது கணக்காய்வு அறிக்கைகளை சபையில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM