இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க தயார் - அமைச்சர் டக்ளஸ்

Published By: Vishnu

11 Dec, 2023 | 06:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை  இந்திய மீனவர் பிரச்சினை தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது. வட மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கடற்றொழி மற்றும்  நீர்ப்பாசன அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை நெடுங்காலமாக தொடர்கின்றது.

எம்மைப் பொறுத்தவரை நாம் அதற்காக இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். முதலாவது நடவடிக்கை இராஜதந்திர ரீதியில் அதனை முன்னெடுப்பது. அந்த வகையில் ராஜதந்திர ரீதியாக பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு அவை பயனளிக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

இரண்டாவதாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்தல்.

அந்த வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைதுகள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் மற்றும் இரண்டு தினங்களுக்கு முன்பதாகவும் அத்து மீறி எமது கடற்பரப்பு பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

எமது மீனவர்கள் அதன் போது கடற்படையினரிடம் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்கள். அதன் போது கடற்படையினரும் வேண்டா வெறுப்பாக இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

இத்தகைய கைது செய்திகள் தமிழ்நாட்டில் பரப்பப்படும் போது அது பிரச்சினைக்குரியதாகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழில் எனவும் இலங்கை கடற்படையே  அவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்கின்றார்கள் என்றும் அங்குள்ளவர்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.

அதற்கிணங்க ஒரு புதிய வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நான் சிந்தித்துள்ளேன். அந்த வகையில் வடக்கிலுள்ள கடற் தொழிலாளர்கள் ஒரு குழுவாக தமிழ்நாட்டுக்கு சென்று அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ஊடகங்களுக்கும் இங்குள்ள உண்மை நிலையை தெளிவுபடுத்த முடியும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறியே இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து வளங்களை அழிக்கின்றார்கள் என்றும் அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து அதன் காரணமாகவே கடற்படையினர் அவர்களை கைது செய்வதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி வட மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும். அத்துடன் அங்குள்ள ஊடகங்களுக்கும் அது தொடர்பில் தெளிவுபடுத்த முடியும்.

இந்த செயற்பாட்டிற்கு வடக்கிலுள்ள எம்பிக்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எனினும் சார்ள்ஸ் எம்பி அதற்கு இணக்கம் தெரிவிக்காமல் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து பேசலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அது ஒரு பிரச்சினை இல்லை. எனினும் அடிக்கடி இந்தியத் தூதுவர்கள் மாற்ற மடைந்து செல்வதால் அதில் ஒரு சிக்கல் காணப்படுகிறது.

எனினும் இந்திய தூதுவர்களுக்கு இந்த விவகாரம் அத்துப்படி. அவர்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முழுமையாக அறிந்துள்ளார்கள் என்பதால் அவர்களும் கூட தமிழ்நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல்வாதிகளுடன் பேசலாம். அதன் மூலம் தான் நிரந்தர தீர்வு காண முடியும் என்ற யோசனையையே முன் வைப்பார்கள்.

அதற்கிணங்க சார்ள்ஸ் எம்பி இதனை புரிந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு சென்று இந்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என நான் நம்புகின்றேன் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி , இலங்கையில் உள்ள இந்திய தூதுவர்கள் மாறினாலும் தமிழ் நாடு போன்ற மாநில அரசாங்கத்துடன் நாம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்தியா என்ற பாரிய  அரசாங்கத்துடன் அது தொடர்பில் பேசினால் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.

அந்த வகையில் முதற்கட்டமாக இலங்கையில் உள்ள இந்திய தூதுவருடன் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்தளத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யார் யாரெல்லாம் இந்திய தூதுவரை சந்திக்கப் போகின்றீர்கள் என்ற பட்டியலை என்னிடம் தந்தால் நான் அதற்கான ஏற்பாடுகளைமேற்கொள்வேன்.

கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் எழுத்து மூலம் எனக்கு நீங்கள் அதற்கான கோரிக்கையை  முன் வைத்தால் நான் நிச்சயம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் பேச்சுவார்த்தைக்கான திகதியையும் பெற்றுத்தர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தென்னைமரவாடி கந்தசாமி மலை ஆலயத்தில்...

2024-02-23 13:25:18
news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47