(லியோ நிரோஷ தர்ஷன்)

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்படவிடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வெள்ளை யானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்ட சந்திப்பிற்கான அழைப்பை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.

மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்ரியவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முதலமைச்சர்களுக்கான  கூட்டத்தின் போது  இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு , இவ்வாறான சந்திப்புகளின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்துக்கு 51 வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்து மூன்றாம் மாதம் ஆரம்பிக்கும் தறுவாயிலும் இதுவரை ஒரு சதம் நிதி கூட கிடைக்காத நிலையில் பல வேலைத்திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.

இதேவேளை நகர அபிவிருத்தி  அதிகார சபையின் ஊடாக மாகணங்களுக்கு உரிய அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க முற்படும் வேளையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண அரசாங்கங்களின் மேலும் அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றதா என்ற சந்தேகமும் முதலமைச்சர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

எனவே அமைச்சர்களுக்கோ அமைச்சுக்களுக்கோ மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட வில்லை. மாறாக  ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட்டன என்பதை உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.