ஹரிகரன்
இலங்கையில் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக, பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த 5ஆம் திகதி ஒரு விவாதம் இடம்பெற்றிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டேயினால், கொண்டு வரப்பட்ட ஒரு பிரேரணையின் அடிப்படையில்- பிற்பகல் 2.30 மணி தொடக்கம், 4 மணி வரை, சுமார் ஒன்றரை மணி நேரம் அந்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, இலங்கை தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டு, அது பிரித்தானிய பாராளுமன்ற நூலக இணையத்தளத்தில் டிசெம்பர் முதலாம் திகதி பதிவேற்றப்பட்டது.
அதேவேளை, இந்த விவாதம் நடப்பதற்கு முன்னர், அவசர அவசரமாக லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு ஆவணத்தை தயாரித்து அனுப்பியிருந்தது. போர்க்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகம இப்போது லண்டனில் இலங்கைத் தூதுவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
அவர் இந்த ஆவணத்தின் மூலம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இலங்கை தொடர்பான விவாதம் நடப்பதற்கு முதல் நாள் அவர், ஐ.நா அமைதிப்படை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக துருக்கியின் அங்காராவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
இதனால், அவர் லண்டனில் இல்லாத நிலையில்தான், பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது.
இலங்கைத் தூதரகத்தினால் பிரித்தானிய எம்.பிக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தில், இரண்டு முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மறு ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பது ஒன்று.
காணாமல் போனோருக்கான பணியகம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது, அது காணாமல் போனோர் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொடுக்க உதவுகிறது, காணாமல்போன மூவர் இறந்து போனதையும், 16 பேர் உயிருடன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது என்பது இரண்டாவது விடயம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் அரசாங்கம் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பது உலகறிந்த உண்மை.
அடுத்து, காணாமல் போனோருக்கான பணியகம் மீது பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் ஏன் வீதி வீதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
காணாமல்போனதாக 22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பதிவாகியுள்ள நிலையில்- 3 பேர் இறந்ததையும், 16 பேர் உயிருடன் இருப்பதையும் கண்டுபிடித்திருப்பதாக சாதனைப் பட்டியல் கொடுப்பதையிட்டு அரசாங்கம் வெட்கப்படவில்லை.
இந்தக் கணக்கே, அந்தச் செயலகத்தின் செயற்திறன் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை துலாம்பரமாக காட்டுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த ஆவணம் பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தின் போது, உறுப்பினர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரேன் போர், காஸா மோதல்களுக்குள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக உலகம் தலையை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து சர்வதேச அளவில் பெரிதாக எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.
அதற்கு முன்னர் கொவிட் தொற்றும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியும், தமிழர்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் உரிமைகள் சார்ந்த விடயங்களை பின்னுக்குத் தள்ளி விட்டன.
இதனால் பலரும் மறந்து போயிருந்த பல்வேறு விடயங்களை வெளிப்படுத்துவதற்கு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் விவாதம், உதவியிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்படுவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெறுவது, செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் என நீண்டு செல்லும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டது.
போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் இராணுவ மயமாக்கல் முன்னெடுக்கப்படுவது பிரித்தானியாவினதும், சர்வதேசத்தினதும் கூட்டுத் தோல்வி என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார், தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டோனல்.
இலங்கையில் போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அமெரிக்காவும் கனடாவும் தடைகளை விதித்திருப்பதைப் பாராட்டிய அவர், அதுபோல பிரித்தானியாவும் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பாக வர்த்தக தடைகள், வரிகளின் ஊடாக இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக- அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன போன்று பிரித்தானியாவும் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்த விவாதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்டவர்களின் பெயர்களும் இதன்போது குறிப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் எலியட் கோல்பேர்ன் உரையாற்றிய போது, வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவத்தின் 20 டிவிசன்களில் 16 டிவிசன்கள், இந்தப் பகுதிகளில நிறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டதுடன்,
பிரித்தானியாவின்.. (முதலாம் பக்கத் தொடர்ச்சி...)
நிலையான மற்றும் நீடித்த அமைதியை உருவாக்குவதற்கு இராணுவமயநீக்கம் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியம், நிதியை விடுவிப்பதற்கு இலங்கையின் பாதுகாப்புச செலவினங்களை குறைக்குமாறு நிபந்தனையை முன்வைத்து வலியுறுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் பலரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைத் தாண்டிய கடுமையான நடவடிக்கைளை வலியுறுத்தியிருக்கின்றனர்.
பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்ட வர்த்தகச் சலுகைகளை முன்னிறுத்தி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும், பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய, பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்திக்கான பாராளுமன்ற இராஜாங்க அடிநிலைச் செயலாளர், லியோ டொசெர்ட்டி, இலங்கையில் குறிப்பாக தமிழர்களின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று கூறியிருந்தார்.
சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை மீறுகிறது என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது என்றும் தமிழ்ச் சமூகத்தினர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது எங்களுக்கு தெரியும் என்றும்,
வடக்கு கிழக்கில் படையினரின் கண்காணிப்புகள் அச்சுறுத்தல்கள் தொடர்வது பற்றி தாங்கள் அறிந்திருப்பதாகவும், லியோ டொசெர்ட்டி கூறியிருந்தார்.
மனித உரிமைகள் கரிசனைக்குரிய 32 நாடுகளில் இலங்கையையும் ஒன்றாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்த பிரித்தானிய இராஜாங்க செயலர், இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு அல்லது உத்தி என்ன என்பது பற்றிய இந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.
போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பது உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இடம்பெற்ற இந்த விவாதத்தில் அதனை சார்ந்த எந்த வாக்குறுதியையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்க முன்வர வைக்கவில்லை.
ஆனாலும் இந்த விவாதம் பிரித்தானிய அரசுக்கான அழுத்தங்களை அதிகரிக்க செய்திருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு அப்பால் இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை நிறுத்துவது, பொறுப்பு கூறல் சார்ந்து செயற்படுவது போன்ற விடயங்களில், பிரித்தானியாவுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை பிரித்தானிய பாராளுமன்ற விவாதம் வெளிப்படுத்தி இருக்கிறது.
இதற்கு அப்பால் பிரித்தானிய அரசாங்கமே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- எடுக்க முடியும்.
அது எவ்வாறானது என்பதையிட்டு எவ்வித கருத்தும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படுத்தப்படாதது ஏமாற்றத்துக்குரிய ஒரு விடயம் தான்.
போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க பிரித்தானியா தயாராகிறது என, தகவல்கள் வெளியாகி பல மாதங்களாகியும் அது சார்ந்த எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்த இந்த விவாதமும் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களும் அதற்கான உந்துதல்களை பிரித்தானிய அரசுக்கு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM