களுத்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள குழு நபர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக இரு பாதாள குழுக்கள் இடையே நிலவி வந்த பகையே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, சிறைச்சாலையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து கெப்ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிறைச்சாலை பஸ் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதாள உலக குழு நபர் அருன உதேயசாந்த பத்திரன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளான எஸ். சன்னிகம மற்றும் எஸ்.ஆர் விஜயரத்ன ஆகியோர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனையவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அருகில் இருந்த வீடுகளின் மீதும் துப்பாக்கி ரவைகள் பாயந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் விபரிக்கையில், 

  '8.30 மணியளவில் நானும் எனது மகளும் வீட்டின் முன் அறையில் அமர்ந்நதிருந்த போது பட்டாசு கொளுத்து போன்று சத்தம் கேட்டது.

இப் பகுதியில் திருமண வைபவம் ஒன்றும் இல்லை. எனினும் யார் பட்டாசு கொளுத்துகின்றார்கள் என சென்று பார்த்தேன். இதன்போது சிறைச்சாலை பஸ் உள்ளே இருந்து அபாய குரல் கேட்டது.

உடனடியாக நானும் மகளும் வீட்டின் பின்புறமாக பாய்ந்து சென்றோம். இதன்போது எனது அம்மாவின் வீட்டின் கூரை மீது ஏதோ ஒன்று விழுந்து புகை கிளம்புவதை அவதானித்தேன்.

ஏதோ அசம்பவாவிதம் இடம்பெறுகின்றது என எண்ணிக்கொண்டேன். வீட்டின் சுவர் மற்றும் கூரை மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளன' என்றார்.

சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கூறுகையில்,

'நான் எனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போது மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து அவதானித்த போது வீதியில் சிறைச்சாலை பஸ் சென்றது. இதன்போது சில நிமிடங்களில் பஸ் சென்ற இடத்தில் பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது.

பட்டாசு வெடிப்பதற்கு சாத்தியம் இல்லை என அம்மாவிடம் கூறும் போதே ஒரு தோட்டா எமது வீட்டின் சுவரை துளைத்தது. உடனடியாக நான் எனது மகனை தூக்கி கொண்டு  வீட்டினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டேன்.

இதன் பின்னர் யன்னல் மீதும் தோட்டா ஒன்று துளைத்தது' என்றார்.

 சம்பவம் தொடர்பில் களுத்துறை விசேட பொலிஸ் குழுகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.