(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஒருசில குறைபாடுகள் உள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். சட்டமூலம் முதல் வாசிப்புக்காக எதிர்வரும் 12 அல்லது 13 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படமாட்டாது. சட்டமூலத்தை 225 உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை எதிரணியினர் முன்வைக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் கருத்துக்கள் அடிப்படையற்றவை. மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் கடந்த 14 மாத காலமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தேன்.
12 பேர் மாத்திரமே கலந்துக் கொண்டார்கள். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்த கரு ஜயசூரிய,ரவி கருணாநாயக்க,அஜித் பெரேரா ஆகியோர் தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.
மின்சாரத்துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்சார சபையுடன் தொடர்புடைய 34 தொழிற்சங்கங்களுடன் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டேன். வேண்டுமாயின் அதன் காணொளியை வழங்க முடியும்.
அதேபோல் மின்சார சபையின் 114 உயர்மட்ட அதிகாரிகளுடனும்,மனிதவள பிரிவிடமும் 3 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த மறுசீரமைப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் மாபா பதிரன உட்பட குழுவின் உறுப்பினர்கள் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் இந்த குழுவில் பணியாற்றினார்கள்.
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகிறதை ஏற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழிப்பெயர்ப்பில் இரண்டு உறுப்புரைகள் நீக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஆகவே இந்த வர்த்தமானியில் முன்னெடுக்கப்பட வேண்டிய 42 திருத்தங்களை சட்ட திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். திருத்தங்களுடன் வர்த்தமானி மீண்டும் வெளியிடப்படும்.
பாராளுமன்ற கூட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய தேவை எமக்கு இல்லை.
இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக குறிப்பிடப்பட்டது. கடந்த 14 மாதங்களாக பொறுப்புடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளை குழுவினர் முன்வைத்துள்ளார்கள். ஆகவே அவசரப்பட வேண்டிய தேவை இல்லை.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜெய்கா நிறுவனம் ஆகிய சர்வதேச நிறுவனங்களிடம் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படமாட்டாது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும்.225 உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம்.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான குழுவை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு எதிரணியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த குழுவை நானே நியமித்தேன். அமைச்சர் என்ற ரீதியில் நான் பொறுப்புக் கூற வேண்டும் ஆகவே என்னை சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள்.
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மின்சார சபை சட்டத்தை திருத்தம் செய்யாமல் மின்கட்டமைப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிந்தது.
மழைவீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்வைக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM