(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை அடக்குவதற்கு ஊடகத்தை அடக்குவதே ஒரே வழி என்று அரசாங்கம் நினைக்குமாயின் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் அரச கட்டமைப்பினாலும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களினாலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நேற்று இந்த சபையில் உரையாற்றிய பின்னர் நான் ஊடக நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வெளியே செல்லும் போது இந்த சபையில் ஒருவர் ''ஆம்பளையா இருந்தால் இந்த சபையில் இருந்து எனது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்''என்று கூறினார்.
அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் ஜனாதிபதியே இந்த சபையில் அவரிடம் கேள்விகள் எழுப்பும் போது பதிலளிக்காமல் தப்பியோடுவதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். எனவே அவர் என்னிடம் கேட்கும் கேள்வியை ஜனாதிபதியிடம் போய் ''நீங்கள் ஆம்பிளையா இல்லையா'' என்று கேட்க வேண்டும்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்தேன் என்பது அனைவருக்கும் அறிந்த விடயம். இவர் புதிதாக ஒரு விஞ்ஞானி போல் கண்டுபிடித்த விடயம் அல்ல.கண்டியில் நான் கற்ற பாடசாலை கூட பிழையாக சொல்லியிருந்தார்.
நான் கண்டியில் உள்ள திரித்துவ கல்லூரியில் கல்வி கற்றேன். அது சிங்கள பாடசாலை என்று சொல்லியிருந்தார். அது மூவின மாணவர்களும் படித்த பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய நண்பர்கள் உள்ளார்கள்.
என்னுடைய திருமணத்தைப்பற்றி சொல்லியிருந்தார். இந்த ஊடகங்களும் இவ்வாறு விமர்சிப்பவர்களும் கூறுவதனைப் பார்த்தால் எனக்கு இதுவரையில் 5,6 திருமணங்கள் நடந்திருக்க வேண்டும். இவ்வாறான அடி முட்டாளின் கதைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பாது விட்டாலும் மக்கள் எனது பதிலை எதிர்பார்க்கும் காரணத்தினால் இவ்விடயத்தை சொல்லியிருக்கின்றேன்.
எனது வளர்ச்சிக்கு காரணமே எனக்கு எதிராக முன் வைக்கப்படும் விமர்சனங்கள்தான். இவ்வாறான ஒரு அடி முட்டாள், வடை விற்றுத் திரிந்த ஒருவர் சொல்லும் கதையை பாராளுமன்றத்தில் இவ்வாறான ஒருவர் சொல்கின்றார் என்பதற்காக ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாகப்போட்டு அதிலே ஒரு கிளு கிளுப்பு,ஒரு சந்தோஷம் அடைகின்றன. நான் இன்று பாராளுமன்றத்தில் மிகவும் வயது குறைந்த எம்.பி.யாக தெரிவு செய்யப்படுவதற்கு இவ்வாறான விமர்சனங்கள்தான் உதவின. இவ்வாறான விமர்சனங்கள் எனக்கு இன்னும் பலத்தையே சேர்க்கும்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் அரச கட்டமைப்புக்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஐ.பி.சியின் பிராந்திய செய்தி சேகரிப்பாளர் தீபன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதே போல் அண்மையில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தந்த போது செய்த செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்களான கிருஸ்ணகுமார், சஷி புண்ணியமூர்த்தி ஆகியோருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களினாலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை அடக்குவதற்கு ஊடகத்தை அடக்குவது ஒரே வழி என்று அரசாங்கம் நினைக்குமாயின் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
அரச தொலைக்காட்சி சேவையான வசந்தத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து செய்திகளை வழங்குபவர்களுக்கு ஒரு செய்திக்கு 1000 ரூபா வழங்கப்படுகிறது. ஆனால் ஐ.டி.என் தொலைக்காட்சியில் ஒரு செய்திக்கு 2000 ருபா வழங்கப்படுகிறது. ஊடகவியலாளர்களின் சேவையை இன அடிப்படையில் வேறுபடுத்துவது முறையற்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM