(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
என்னை மாத்திரம் குற்றவாளியாக்கி சபாநாயகர் எனக்கு தண்டனை வழங்கியதால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஷ, எதிரணியின் உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து சபாநாயகர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார்.
சனத் நிஷாந்த முன்வைத்த சிறப்புரிமை மீறலுக்கு எதிரணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, 2023.11.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்வதற்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டன. அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்துக்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாட்டை ஒட்டுமொத்த மக்களும் விமர்சிக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்துகிறார் என்பதை மக்கள் அறிவார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நிலையியல் கட்டளைக்கு முரணாக செயற்பட்டார்.
அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் 27 இரண்டின் கீழ் உரையை ஆரம்பித்த போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார ஆளும் தரப்பினரை அவரது தொலைபேசி ஊடாக காணொளி பதிவு செய்தார். அதே போல் நளின் பண்டார எமது அனுமதி இல்லாமல் எம்மை காணொளி பதிவு போது அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் காணொளி பதிவு செய்வதை தவிர்க்குமாறு அறிவித்தார். ஆனால் நளின் பண்டார அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோ செய்துக் கொண்டிருந்தார்.
இந்த செயற்பாட்டினால் அன்று சபையில் முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சம்பவத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் தரப்பினரை அச்சுறுத்தி , முறையற்ற வகையில் செயற்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட சபாநாயகர் என்னை மாத்திரம் குற்றவாளியாக்கி எனக்கு தண்டனை வழங்கியதால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் செயற்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகளினால் எமது சிறப்புரிமை மீறப்படுகிறது. அவர் எமது நேரத்தையும் திருடுகிறார். ஆகவே காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
சபைக்கு பொருத்தமில்லாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருக்குமாயின் அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு வழிமுறை உள்ளது. சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு முன்னர் அந்த பிரேரணையை சபாநாயகருக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற வேண்டும். ஆகவே தற்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தவர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டாரா என கேள்வியெழுப்பினார்.
சபைக்கு தலைமை தாங்கிய அஜித் ராஜபக்ஷ,சபாநாயகருக்கு அறிவித்து ஒழுங்குபத்திரத்தில் அந்த உறுப்பினரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார். மீண்டும் எழுந்து கேள்வியெழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சிறப்புரிமை மீறல் பிரச்சினையின் போது குறிப்பிட்ட விடயங்களுக்கு சபநாயாகர் அனுமதி வழங்கினாரா என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ என்னை நீங்கள் வித்தைக்காரன் என்று நினைத்தீர்களா, ஒழுங்குப்பத்திரத்தில் இருந்ததற்கு அமையவே நான் அவருக்கு அனுமதி வழங்கினேன் என்றார்.
இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எமக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். வீடியோ செய்ததை தவறு என்று குறிப்பிட முடியாது. கீழ்த்தரமானவர்கள் எதிர்க்கட்சித் தலைவரை தாக்குவதற்கு முயற்சித்தார்கள். பாராளுமன்றத்தில் நாங்கள் மிளகாய் தூய் வீசி தாக்குதலை மேற்கொள்ளவில்லை. ஆகவே பயனற்றவர்களுக்கு முக்கியத்துவளிக்காதீர்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM