மத்ரஸாவில் சிசிடிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம நேற்று வியாழக்கிழமை (07) அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இன்று (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
செய்திப்பின்னணி
13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மத்ரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.
மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இது தவிர குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை (2) அன்று சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM