ரொபட் அன்டனி
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருக்கின்ற சூழலில் எதிர்வரும் காலங்களில் வரவிருக்கின்ற ஒரு ஆபத்தை இப்போதே தடுத்து நிறுத்தி அதற்கு மாற்று திட்டங்களை வகுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இலங்கை இருக்கின்றது. நீண்டகால ரீதியான ஒரு ஆபத்து தெரிகிறது. அதனை இப்போதே தடுத்துவிட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுப்பது அவசியமாகும்.
வீழ்ச்சி
இவ்வருடத்தின் முதல் பத்து மாதங்களில் இலங்கை பெற்றிருக்கின்ற ஏற்றுமதி வருமானத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியடையக்கூடிய நிலைமையில் புள்ளிவிபரங்கள் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கின்றது. காரணம் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதாவது இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் இலங்கை கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றுள்ளது. இதுவே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானமாக இலங்கை 11 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கை கிட்டத்தட்ட கடந்த வருடத்தின் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் 10 வீதமான வருமான இழப்பை சந்தித்திருக்கிறது.
அதைவிட இறக்குமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த வருடம் முதல் 10 மாதங்களில் 15 .4 பில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் 13.9 பில்லியன் அதாவது கிட்டத்தட்ட 14 பில்லியன் டொலகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன்படி இறக்குமதி செலவும் 9.6 வீதத்தில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்த நிலைக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம்.
புள்ளிவிபரங்கள் கூறுவது என்ன?
ஆனால் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தமை அவ்வளவு நல்லதொரு சமிக்ஞை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் 71 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் புரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர் வருமானமும் பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை ஊடாக 1.6 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத்திருக்கின்றன. இதுவே கடந்த வருட முதல் 10 மாதங்களில் 928 மில்லியன் டொலர்களே கிடைத்தன. அதேபோன்று வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வருடத்தின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு 4862 மில்லியன் டொலர்களை அனுப்பி இருக்கின்றனர். இதுவே கடந்த வருடம் முதல் 10 மாதங்களில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டொலர்களே அனுப்பப்பட்டிருந்தன. இதிலும் 66 வீதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டொலர் இடைவெளி
இதன் காரணமாக இலங்கையின் கடந்த 10 மாதங்களுக்கான திரண்ட நிலுவை அதாவது டொலர் உள்வருகை வெளிச் செல்லல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி நேர் பெருமானத்தில் அமைந்திருக்கின்றது. அதாவது இரண்டு பில்லியன் டொலர்கள் நேர் பெருமானத்தில் காணப்படுகின்றன. வெளிநாட்டு கையிருப்பும் 3.6 பில்லியன் டொலர்களாக உள்ளன. ஆனால் இலங்கை இன்னும் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கவில்லை. வெளிநாட்டு கடல்களை செலுத்த ஆரம்பித்தால் கிட்டத்தட்ட ஐந்து அல்லது நான்கு பில்லியன் டொலர்களை வருடம்தோறும் இலங்கை செலுத்த வேண்டிவரும்.
எனவே கடன் மறுசீரமைப்பு திட்டங்களின் பின்னர் வெளிநாட்டு கடன்களை செலுத்த இலங்கை ஆரம்பிக்கும்போது நெருக்கடிகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது. தற்போது வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படாமல் இருப்பதால் ஏற்றுமதி வருமானம் குறைந்திருந்தாலும் டொலர் உள்வருகை வெளி செல்கைக்கு இடையிலான இடைவெளியானது நேர் பெருமானத்தில் காணப்படுகிறது. கடந்த 2022 ஆம் வருடத்தின் முதல் 10 மாதங்களில் டொலர் உள் வருகை மற்றும் வெளிச்செல்கை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியானது மறை பெறுமானத்தில் காணப்பட்டது. அதாவது மூன்று பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக காணப்பட்டது.
ஆனால் அதுவே இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சாதகமான பெறுபேற்றை காட்டியிருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் இலங்கை இன்னும் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதாகும்.
சூழ்நிலையை புரிந்துகொள்வது அவசியம்
எப்படியிருப்பினும் தற்போது ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணத்தை பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏற்றுமதி வருமானம் கடந்த ஒக்டோபர் மாதத்திலும் 19 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இலங்கை செய்கின்ற ஏற்றுமதி வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு அந்த நாடுகளில் காணப்படுகின்ற பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக அமையலாம்.
நிலைமை எப்படியிருந்தாலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்து செல்கின்றமையானது எதிர்காலத்தில் ஒரு ஆபத்தான நிலைமையை தோற்றுவிக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது. எனவே அதனை தற்போது இருந்தே நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்றுமதி வருமான அதிகரிப்பின் முக்கியம்
ஏற்றுமதி வருமானம் நாட்டைப் பொறுத்தவரை தீர்க்கமானது. டொலர் உள் வருகையில் ஏற்றுமதி வருமானமே முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. எப்போதுமே ஏற்றுமதியை விட இறக்குமதி செலவு அதிகமாக காணப்படும். அந்தவகையில் இலங்கையிலும் வருடாந்தம் கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர்கள் இறக்குமதிக்காக செலவு செய்யப்படுகின்றன. ஆனால் கிட்டத்தட்ட 12 பில்லியன் டொலர்கள் மட்டுமே ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றன.
இங்கு கிட்டத்தட்ட 10 தொடக்கம் 8 பில்லியன் டொலர்கள் வரை ஒவ்வொரு வருடமும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. சுற்றுலாத்துறை ஊடாகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஊடாகவும் டொலர்கள் உள்வந்தாலும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லை. எனவே ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு திட்டங்கள் அவசியமாகின்றன.
பூகோள பெறுமதி சங்கிலி திட்டம்
இந்த விடயத்தில் இலங்கை Global Value Chain என்ற திட்டத்துக்குள் செல்ல வேண்டியுள்ளது. உலகளாவிய பெறுமதி சங்கிலி என்ற திட்டத்துக்குள் இலங்கை செல்ல வேண்டும். அதாவது முழுமையான பொருட்களை முழுமையாக உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் காலம் தற்போது மருவி வருகின்றது. தற்போது சகல நாடுகளும் ஒரு பொதுவான உற்பத்தியில் பங்கெடுக்கும் வர்த்தகம் குறித்தும் சகலரும் கவனம் செலுத்துகின்றனர். அதாவது பகுதி அளவிலான உற்பத்திகளை செய்வதில் இலங்கை நாட்டம் காட்ட வேண்டும். உதாரணமாக இந்தியாவில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றால் அதன் ஒரு பகுதியை இலங்கி உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது இலங்கைக்கான சந்தை பங்கு நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். இதற்கு இலங்கை வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டும். அதனூடாகவே உலகளாவிய பெறுமதி சங்கிலி உற்பத்தி திட்டத்துக்குள் இலங்கை செல்ல முடியும். உதாரணமாக வெளிநாடு ஒன்றில் ஒரு தொலைபேசி உற்பத்தி செய்யப்படுகின்றது என்றால் அதற்கான ஒரு உதிரிப்பாகத்தை மட்டும் இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க திட்டங்கள் அவசியம்
அதேபோன்று இலங்கையிலும் உள்நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக தொழில் முயற்சியாளர்களுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி உற்பத்திகளை செய்வதற்கான ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறான பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிகம் கேள்வி காணப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு அவற்றை இலங்கையில் உற்பத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உதாரணமாக ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் அவசியமாகும்.
ஆடைத்துறை
2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஆடை துறையூடான ஏற்றுமதி வருமானத்தை பார்க்கும் போது 19 வீதமான வீழ்ச்சியை அது சந்தித்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டொலர்களை ஆடை துறையுடாக இலங்கையை பெற்றிருக்கின்றது. ஆனால் 2023 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களையே இலங்கை ஏற்றுமதி வருமானமாக பெற்றுள்ளது. 19 வீதமான வீழ்ச்சியை இலங்கை சந்தித்திருக்கின்றது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்க்க வேண்டும். இறக்குமதி கட்டுப்பாடுகளை செய்யும்போது இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். காரணம் இலங்கை ஆடை துறையில் அதிகளமான ஏற்றுமதி வருமானத்தை பெற்றாலும் அதற்கான மூலப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கின்றது. எனவே இறக்குமதிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் ஆடை துறைக்கான உள்ளீடுகள் இறக்குமதி குறைவடையும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் அது ஆடைத்துறையின் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்கும்.
மீண்டும் நெருக்கடியை தாங்க முடியாது
அதுமட்டுமன்றி தேயிலை ஏற்றுமதி ஊடான வருமானம் இன்னும் ஒரு பில்லியன் டொலர் அளவிலேயே காணப்படுகின்றது. இதனை கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டொலர்கள் அளவுக்கு அதிகரிக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது. அதாவது ஏற்றுமதியின் சகல மூலங்கள் குறித்தும் அவதானம் அவசியமாகின்றது. டொலர் நெருக்கடி காரணமாக எந்தளவு தூரம் நெருக்கடி ஏற்படும் என்பது கடந்த 2022 ஆம் ஆண்டு உதாரணத்துடன் நிரூபிக்கப்பட்டது. மீண்டும் அவ்வாறான நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு இலங்கை டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதில் மிக முக்கியமான மூலமாக ஏற்றுமதி வருமானமே காணப்படுகிறது. எனவே ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை இப்போது இருந்தே அதிகரிக்க வேண்டும்.
விசேட திட்டங்கள் அவசியம்
தற்போது இது தொடர்பில் கவனம் செலுத்தாவிடின் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்காலத்தில் கொண்டு வந்துவிடும். அவ்வாறான நெருக்கடியை அதனை தடுத்து நிறுத்துவதற்கு தற்போதிருந்தே தேசிய சர்வதேச திட்டங்களை இலங்கை முன்னெடுப்பது முக்கியமாகும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருகையை அதிகரித்தல், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை பெறுதல் என்பன நெருக்கடியை தவிர்ப்பதற்கான முக்கியமான மூலங்களாக காணப்படுகின்றன. அவற்றை அதிகரிக்க விசேட திட்டங்கள் வகுக்கப்படுவது முக்கியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM