மும்பையில் 1வது ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023 : களமிறங்கும் இலங்கை அணி! 

Published By: Nanthini

08 Dec, 2023 | 11:48 PM
image

(மா. உஷாநந்தினி)

லகளவில் கிரிக்கெட், வலைப்பந்து, டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்கள் மிகப் பிரபலம். ஆனால், Dueball என்றொரு விளையாட்டை பற்றி கேட்டால், இலங்கையில் பலருக்கு இந்த பெயரே புதிதாக இருக்கிறது. 

நாட்டில் பெருமளவு மக்களால் அறியப்படாததும், சமீபத்தில் அறிமுகமானதுமான பந்தை மையப்படுத்திய ஒரு விளையாட்டே 'டியூபால்'.   

இந்தியாவின், நாக்பூரில் பிரபல ஹொக்கி வீரரான பிரோஸ் கான் (Firoz khan) 2013ஆம் ஆண்டில் உருவாக்கிய இந்த 'டியூபால்' விளையாட்டு, தற்போது பல நாடுகளிலும் இளைஞர்கள் உட்பட பல தரப்பினரை ஈர்த்து வருகிறது. 

தமிழ்நாடு, மும்பை, கர்நாடகா, குஜராத் என பல இந்திய மாநிலங்களில் தேசிய ரீதியிலான போட்டியாக மட்டுமன்றி, 20க்கு மேற்பட்ட நாடுகளிலும் டியூ பால் அறிமுகப்படுத்தப்பட்டு, சில நாடுகளில் விளையாடப்பட்டும் வருகிறது.

எனினும், இந்த ஆண்டே முதல் முறையாக ஆசிய நாடுகளின் இணைவிலும், பங்கேற்பிலும் '1வது ஆசிய டியூபால் சம்பியன்ஷிப் 2023' போட்டி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.   

அந்த வகையில், உலக டியூபால் பெடரேஷன் மற்றும் ஆசிய டியூபால் பெடரேஷனால் சகல வயதினருக்குமான ஆண்கள், பெண்கள் 'ஆசிய டியூபால் சம்பியன்ஷிப் 2023' போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை  மும்பை, வடாலாவில் உள்ள BPCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவுகள், நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், ஈரான், ஈராக், பஹ்ரேன், ஏமன், ஓமான், சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய 14 நாடுகள் பங்கேற்கும்.

இந்த ஆசிய Dueball சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணியும் கலந்துகொள்ளவுள்ளதோடு, இதனூடாக ஆசிய மட்ட தளத்தை சந்திப்பதற்கு ஓர் அரிய வாய்ப்பினை இலங்கை டியூபால் அணியினர் பெற்றுள்ளமை முக்கியமான விடயம். 

இந்த ஆசிய போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்கள் (13 பேர்), பெண்கள் (13 பேர்) இரு அணிகளிலும் மொத்தமாக 26 வீர, வீராங்கனைகள் களமிறங்கவுள்ளதாகவும், அவர்களில் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் 5 ஆண்கள் மற்றும் 7 பெண்கள்; கண்டியை சேர்ந்தவர்கள் 4 ஆண்கள்; கொழும்பை சேர்ந்தவர்கள் 4 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் எனவும் ஸ்ரீ லங்கா டியூபால் பெடரேஷன் (Sri Lanka Dueball Federation) குழு தெரிவித்துள்ளது.  

இவர்களில் ஆசிய Dueballஇல் விளையாடவுள்ள ஆண்கள் அணி வீரரான மட்டக்களப்பை சேர்ந்த மனோகரன் வலேரியன் சார்ள்ஸ் (வயது 28) எனும் இளைஞர், 

"கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து போன்ற பிரபலமான, கடினமான விளையாட்டுக்களில் பங்குபற்றுவது எமது நோக்கமல்ல. புதிய புதிய விளையாட்டுக்களில் கலந்துகொண்டு, அதனூடாக எமது வருங்கால சந்ததிக்கு பல வாய்ப்புகளை அமைத்துக்கொடுப்பதே எமது எண்ணம்..." என கூறுகிறார். 

Dueball விதிமுறைகள் 

அத்தோடு, அவர் இலங்கைக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள டியூபால் விளையாட்டின் விதிமுறைகளை பற்றியும் விபரிக்கிறார். 

"இளைஞர்களை மிகவும் கவரக்கூடிய டியூபால் விளையாட்டு, 16 ஆசிய நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 25 நாடுகளை உள்ளடக்கியது.  

இது கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், ரக்பி, கால்பந்தாட்டம், ஹொக்கி போன்ற விளையாட்டுக்களிலுள்ள சில விதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இதை உள்ளக அரங்கிலும், வெளிப்புற மைதானங்களிலும் கூட விளையாடலாம். 

22 × 2 = 44 மீற்றர் நீளமுடைய மைதானம் டியூபால் விளையாட பொருத்தமானது. 

மைதானத்தின் தரையிலிருந்து 4.0 மீற்றர் உயரமான கம்பத்தில் 1.2 மீற்றர் அளவுடைய சதுர பலகை காணப்படும். அதன் நடுவே 30 cm ஆரம், 60 cm விட்டமுடைய வட்ட வடிவ துளை காணப்படும்.  இந்த துளையுள்ள பலகைகள் மைதானத்தின் இரு பக்கங்களும் நிறுத்தப்பட்டிருக்கும். 

கூடைப்பந்து விளையாட்டை பொறுத்தவரையில், பந்தை கூடைக்குள் போட்டால் அது 'கோல்' (Goal) என்று கருதப்படும். ஆனால், டியூபோல் விளையாட்டில், 13 மீட்டர் உயரத்திலுள்ள பலகையின் வட்ட வடிவ துளைக்குள் பந்தை எறிந்தால், அதுதான் 'கோல்'. 

எந்த அணி அதிகமாக கோல் அடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும். 

ஒரு தவணை விளையாட்டுக்கான நேரம் 40 நிமிடங்களாகும். முதல் பாதி ஆட்டம் 20 நிமிடங்கள், அடுத்து இடைவேளை 5 நிமிடங்கள்,  தொடர்ந்து இறுதிப் பாதி ஆட்டம் 20 நிமிடங்கள்  விளையாடப்படும்.  

இது வலைப்பந்தாட்டத்தோடு ஒப்பிடக்கூடிய விளையாட்டு. ஆனால், தொடர்ந்து 40 நிமிடங்களும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 

 5 செக்கன்கள் பந்தை கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து ஓடலாம். 5 செக்கன்களுக்குள் பந்தை பவுண்ட்ஸ் செய்து, மீண்டும் பந்தை கைக்கு எடுத்து மேலதிகமாக 5 செக்கன்கள் பந்தை வைத்துக்கொண்டு ஓடலாம். ஆக, ஒருவர் 10 செக்கன்கள் மட்டுமே பந்தை கையில் வைத்திருக்கலாம். 

அடுத்து, இடுப்புக்கு மேல்தான் பந்தை எறிந்து இன்னொருவருக்கு கடத்த வேண்டும். 

40 நிமிடங்களும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நடந்து விளையாட முடியாது. இந்த விளையாட்டு சற்றே கடினமானதுதான்.  

வீரர்களின் எண்ணிக்கை 

"ஒரு அணியில் மொத்தம் 7 பேர் விளையாடுவர். அவர்களில் ஒருவர் கோல் கீப்பராக இருப்பார். (Forward - 3 பேர், Middle back - 2 பேர், Back - ஒருவர், கோல் கீப்பர் - ஒருவர்)

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணியில் 7 பேரும் பெண்கள் அணியில் 7 பேரும் பங்குபற்றுவர். அத்தோடு, மேலதிகமாக அணியொன்றுக்கு 6 பேர் இருப்பர். 

Dueball - பந்து 

"டியூபால் விளையாட்டில் நாம் பயன்படுத்தும் பந்து இலங்கையில் இல்லை. இது டியூபாலுக்கு என்றே பிரத்தியேகமாக இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. தற்போது நாங்கள் விளையாடும் பந்துகள் கூட இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவையே. 

Dueball அறிமுகம் 

"ஆரம்பத்தில் நான் மெய்வல்லுநர் வீரராக இருந்து, பின்னர், Batti Empire Sports Club கழகத்தில் இணைந்து ஜூடோ, கராத்தே, வெயிட் லிஃப்டிங், சுமோ போன்ற பல்வேறு விளையாட்டுக்களை பயின்று, போட்டிகளில் பங்குபற்றி, சான்றிதழ்களை பெற்றிருக்கிறேன்.  சமீபத்தில்தான் கழகம் Dueball விளையாட்டை பற்றி எங்களுக்கு அறியத்தந்தது. 

"எனக்கு நானே பயிற்சி அளித்துக்கொண்டேன்" 

"Dueball முன்பு நாங்கள் கேள்விப்படாத பெயர் என்பதால் இந்த விளையாட்டைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன். விளையாட்டின் பின்னணி, அதன் விதிகள், விளையாடும் முறை என ஒவ்வொன்றையும் வீடியோக்களை பார்த்தும், இணையத்தில் தகவல்களை தேடியெடுத்தும் எனக்கு நானே முதலில் பயிற்சி கொடுத்துக்கொண்டேன். 

விளையாட்டுக்குரிய முதற்கட்ட பயிற்சிகளை நான் ஏற்கெனவே பெற்று முன்தயாரிப்பில் இருந்ததாலும் Dueball விளையாடுவதில் எனக்குள்ள ஆர்வத்தாலும் பந்தை வீசுவது, பிடிப்பது, இலக்கை குறி பார்த்து துளையை நோக்கி பந்தை எறிவது என பயிற்சிகள் வேகமாகவும் இலகுவாகவும் அமைந்துவிட்டன.

அந்த வகையில், இலங்கை Dueball அணிக்காக தெரிவாகியுள்ள வீர, வீராங்கனைகளாக எங்களை நாங்களே உற்சாகப்படுத்தி, வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். 

இலங்கை Dueball வீரர்களின் ஆற்றலை கண்டு வியந்த இந்திய பயிற்சியாளர்கள்  

"சமீபத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த Dueball பயிற்சியாளர்கள், எங்களுக்கு இந்த விளையாட்டின் கொள்கைகளை கற்பித்து, கள பயிற்சிகளையும் வழங்கினர். 

அப்போது பயிற்சியாளர்கள், 'நாங்கள் மற்ற நாடுகளுக்கும் பயிற்சியளிப்பதற்காக சென்றிருந்தோம். அந்த நாடுகளின் அணிகளைப் போல் இலங்கை அணிக்கும் போதிய பயிற்சியோ தேர்ச்சியோ இருக்காது என நினைத்தோம். ஆனால்,  நீங்கள் விளையாடுகிற முறையை பார்க்க ஆச்சரியமாக உள்ளது...' என்றார்கள். 

இத்தனை நுட்பமான பயிற்சியை நாங்கள் இணைய வீடியோக்களை பார்த்தும் தகவல்களை தேடிப் பெற்றுமே அறிந்துகொண்டோம். அத்தோடு, நான் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் இந்த விளையாட்டில் உள்ள விதிகளை சரியான முறையில் கடைபிடித்து பயிற்சி எடுத்துக்கொண்டோம் என்று கூறியபோது அவர்கள் ஆசிய போட்டிக்கு எமது அணியை அழைத்தனர். 

அது மட்டுமன்றி, இந்த போட்டியில் முதலாம் இடத்தையோ இரண்டாம் இடத்தையோ கூட எட்டுமளவுக்கு இலங்கை அணி மிக திறமையாக விளையாடுவதாகவும் கூறினார்கள். 

அதன் பிறகே, நாங்கள் தன்னம்பிக்கையோடு இன்னும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 

புதிய விளையாட்டை தெரிவு செய்ததன் நோக்கம்  

"கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து போன்ற பிரபலமான, கடினமான விளையாட்டுக்களில் பங்குபற்றுவது எமது நோக்கமல்ல. 

புதிது புதிதான விளையாட்டுக்களில் கலந்துகொண்டு, அதனூடாக எமது வருங்கால சந்ததிக்கு பல வாய்ப்புகளை அமைத்துக்கொடுப்பதே எமது எண்ணம்.

அத்தோடு, Dueball இலங்கையில் பரவலாக அறியப்பட வேண்டும். மக்கள் மத்தியில் பரீட்சயமாக வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சு டியூபால் விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும். 

அமைச்சு ஒரு விளையாட்டினை அங்கீகரிப்பதாயின், அவ்விளையாட்டு குறைந்தது 3 வருடங்கள் தொடர்ச்சியாக  களம் கண்டுகொண்டே இருக்க வேண்டும். 

அந்த எதிர்பார்ப்பில் Dueball விளையாட்டை அமைச்சில் முறையாக பதிவு செய்வதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

"கிரிக்கெட் விளையாட்டுக்கு போட்டிகள் அதிகம் ; சாதிப்பது கடினம்" 

"கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டுக்கென்று மட்டக்களப்பிலேயே நிறைய கழகங்கள் உண்டு. அவற்றில் இணைந்து கிரிக்கெட் விளையாடினால் கழகங்களுக்காக மட்டுமே விளையாடும் வாய்ப்பு அமையும். மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் எங்களால் சாதிக்க முடியாது. ஏனென்றால், இங்கே கிரிக்கெட் விளையாட்டுக்கு போட்டிகள் அதிகம். 

ஆகவே, Dueball போன்ற புது விளையாட்டுக்களை தெரிவு செய்து விளையாடினால், மாகாண மட்டத்திலோ தேசிய மட்டத்திலோ நாமும் வேரூன்றி, எமது எதிர்கால சந்ததியினரையும் சாதிக்கத் தூண்டலாம்.  

இதனூடாக எதிர்காலத்தில் அவர்களது தனித்துவமான விளையாட்டுத் திறனை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழ்களை பெற்றுத் தர முடியும். 

ஒரு மாணவன் அல்லது மாணவி உயர்தரத்துக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கும் அல்லது அவரது தகைமைக்கேற்ற தொழிலில் ஈடுபடுவதற்கும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சான்றிதழ் தகைமை கொண்டிருக்க வேண்டும். 

மட்டக்களப்பில் நான் ஒரு சாரணர் அணித் தலைவராகவும் இருக்கிறேன். அதேபோன்று என்னோடு விளையாட்டுத்துறையில் பயணிப்பவர்கள் அவர்களது இலக்குகளை அடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். 

அது நிறைவேறி வருவதாக தோன்றும் வகையில், எங்களது அணியை சேர்ந்த 3 பிள்ளைகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனால் எமக்கு முன்பை விட பலமும் தன்னம்பிக்கையும் அதிகமாகிவிட்டது. 

அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சு அங்கீகரித்தால் பாடசாலை மட்டத்திலும் DueBall  விளையாட்டை அறிமுகப்படுத்த முடியும்.

'ஏதோ வந்தோம் விளையாடினோம் போனோம்' என்ற சிந்தனை இருக்கக்கூடாது. மாறாக, நாம் எதை சாதித்தோம், சமூகத்துக்கு என்ன செய்தோம் என்பதே முக்கியம். 

வீர, வீராங்கனைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நிதிப் பிரச்சினை 

"டியூபால் பயிற்சியில் ஈடுபடுவதிலும், ஊர் கடந்து, நாடு கடந்து சென்று போட்டிகளில் கலந்துகொள்வதிலும் எமக்கு பாரிய இடையூறாக இருப்பது நிதி பிரச்சினையே. 

எங்களது இரு அணிகளிலும் உயர்தர மாணவர்களும் உள்ளனர். தொழில் செய்பவர்களும் உள்ளனர். 

கல்வி கற்பவர்கள் மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களின் பிள்ளைகள்.  

அவர்களது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விளையாட்டுக்களில் ஆர்வத்தோடு ஈடுபடுவதை வரவேற்கின்றனர். எனினும், பிள்ளைகளை விளையாட்டுப் பயிற்சிக்காக வெளி மாவட்டங்களுக்கோ அல்லது போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்குமளவுக்கு போதுமான பண வசதி இல்லாததால் செய்வதறியாமல் தவிக்கின்றனர். 

அது மட்டுமல்ல, இந்த ஆண்டு மும்பையில் நடைபெறவுள்ள ஆசிய டியூபால் சம்பியன்ஷிப்பில் விளையாடச் செல்லும் இலங்கை அணியினரான எங்கள் 26 பேருக்கும் இந்திய விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்துமளவுக்கு போதிய நிதி வசதி இல்லாதது பெரும் பிரச்சினையாகும். 

"உலக கிண்ண டியூபால், டி.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்க இலங்கை அணிக்கு வாய்ப்பு?!"

"அடுத்த வருடம் 'உலக கிண்ண டியூபால் போட்டி' நடத்தப்படும் என கூறப்படுகிறது. அதில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த ஆசிய டியூபால் சம்பியன்ஷிப் போட்டியை  பயன்படுத்திக்கொண்டுள்ளோம். 

இதனூடாக  இலங்கை முழுவதும் Dueball பரவலாக பேசப்படும். விளையாட்டுத்துறை அமைச்சும் டியூபாலை அங்கீகரிக்கும். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா, டி.பி.எல். (DPL - Dueball premier league விளையாட்டுப் போட்டியை நடத்தப்போகிறது. அதிலும் இலங்கை அணியினர் பங்குபற்ற வாய்ப்பளிக்கப்படும் என  உறுதியாக நம்புகிறோம்"  என உற்சாகமாக பதிலளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53