(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேர்தல் வாக்குகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டார் அதன் தாக்கம் ஜெனிவா விவகாரத்தில் செல்வாக்கு செலுத்தியது.
தற்போதைய ஜனாதிபதியும் அவ்வழியில் தான் செல்கிறார். ஜெனிவாவுக்கு ஒன்றை குறிப்பிட்டு விட்டு, உள்ளக மட்டத்தில் அதற்கு எதிர்மறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சர்வதேச சமூகம் மூடர்களல்ல, வெளிவிவகாரத்துறையில் எடுக்கும் தவறான தீர்மானங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு 19.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா விவகாரம்,இந்திய பெருங்கடலுடனான கப்பல் போக்குவரத்து,வெளிநாட்டு இராஜந்திர உறவுகள்,வெளிநாட்டு அந்நிய செலாவணி, சர்வதேச வர்த்தகம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட செயற்பாடுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது.
2022 ஆம் ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சு தொடர்பான கணக்காய்வில் 12 பில்லியன் ரூபா தொடர்பில் முறையான கணக்காய்வு ஏதும் இடம்பெறவில்லை.
வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரை பாதுகாப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.
அதேபோல் ராஜபக்ஷர்களின் குடும்ப உறவினரின் நிதி மோசடி தொடர்பில் பென்டோரா வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு விசேட குழுவை நியமித்தார்.மோசடி செய்யப்பட்டு லன்டன்,அவுஸ்ரேலியா,டுபாய் ஆகிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதிக்கு நேர்ந்தது. என்ன இந்த கேள்விகளுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் பதில் எதிர்பார்க்க முடியாது.ஏனெனில் அவர் தான் ராஜபக்ஷர்களின் சட்டத்தரணியாக பல வழக்குகளில் முன்னிலையானார்.
அதேபோல் மிக் விமான கொள்வனவில் 6.8 மில்லியன் டொலர் நிதி மோசடி குற்ற்சாட்டுக்குள்ளாக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவை ராஜபக்ஷர்கள் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமித்தார்கள்.இவர் மீது நிதி மோசடியுடன் தற்போது ஆயுத வியாபார குற்றச்சாட்டும் உக்ரைனில் முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களை வெளிநாட்டு தூதுவர்களாக நியமித்ததால் இன்று இலங்கையின் வெளிவிவகார கொள்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ' வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான இயந்திரங்களை கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.எமது நாட்டின் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி வழங்கினால் நாட்டின் மீன்வளம் முழுமையாக இல்லாதொழியும்.இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியது தவறு என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.ஆகவே மீன்பிடி விவகாரத்தில் இந்த அரசாங்கம் இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவது சந்தேகத்துக்குரியது.ஆகவே இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டார்.இதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை குறிப்பிட்டு விட்டு,நாட்டில் பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் மூடர்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.அரசாங்கம் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் பொறுப்புக் கூற நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM