(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மலையகத்துக்கு பல்கலைக்கழகம் முக்கியம் என்றாலும் அதற்கு முன்பதாக பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான பாதையை அங்குள்ள மாணவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதே முக்கியமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மலையக பகுதி பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களுக்குமான ஆசிரியர்கள் இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது.
அந்த வகையில் தற்போது கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் எவ்வாறு அந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப முடியும். என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.
மலையக மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் சென்று கல்வி கற்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் கலைத் துறையிலேயே காணப்படுகின்றனர். அவ்வாறானால் அவர்கள் மத்தியிலிருந்து எவ்வாறு டாக்டர்களும் பொறியியலாளர்களும் உருவாக முடியும்?.
அத்துடன் எமது கோரிக்கைக்கமைய இந்திய பிரதமர் 75கோடி இந்த ரூபா எமக்கு வழங்கினார். இது தொடர்பாக வரவு செலவு திட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கதைப்பேன்.
ஆனால் அந்த பணம் எமது மக்களுக்காக வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர் பயிற்சிக்கு அந்த பணத்தை பயன்படுத்துங்கள். மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதாக கூறி அதற்கு அடிக்கல் நாட்டி நிகழ்வை ஏற்படுத்தி மலர்மாலைகளைப் பரிமாறி செயற்படும் அரசியலை அங்கு செய்ய வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக கிடைக்கின்ற நிதியை ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு உபயோகிக்க முடியும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பெரும் கலாசார மத்திய நிலையமொன்றை பல கோடி ரூபா செலவில் நிர்மாணித்துள்ளது. அதனை பராமரிப்பதற்கு முடியாத நிலையில் அதற்கும் இந்தியாவே நிதி வழங்குகிறது.
இரண்டு மூன்று வருடங்களுக்காவது ஆசிரியர்களை உருவாக்குவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிதி பெற்றுக் கொள்ள முடியுமானால் அது சிறந்தது.
கொழும்பில் விவேகானந்தா கல்லூரியில் அதிபர் சம்பந்தமான பிரச்சினைக்கு கல்வி அமைச்சர் தீர்வை பெற்றுக் கொடுத்தார். பெருமளவு மாணவர்களைக் கொண்ட கல்லூரியாக அது காணப்படுகிறது. 2282 மாணவர்கள் அந்த கல்லூரியில் கல்வி பயில்கின்றனர். மற்றுமொரு பாடசாலையும் அந்த கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு 150 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனினும் தற்போது 78 ஆசிரியர்களே கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இது ஆசிரியர் தேவையில் 50 வீதமாகவே காணப்படுகிறது. கணிதம் உட்பட முக்கியமான பல பாடங்களுக்கு அங்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
அதனை கவனத்திற் கொண்டு கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட தமிழ் பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறேன். கனடா மக்களின் உதவியால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அந்த பணி முடிவடையும். ஆனால் அந்த பாடசாலைக்கு தேவையான விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை வழங்கவேண்டும். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM