FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு போராடும் இலங்கை

Published By: Sethu

04 Dec, 2023 | 11:34 AM
image

           * FATF பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் இலங்கை கறுப்பு/ சாம்பல்நிற பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைகளை எதிர்நோக்க நேரிடும்.

                * ஏற்கெனவே 2 தடவைகள் சாம்பல்நிற பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருந்தது.

* இலங்கை பட்டியலில் இடம்பெற்றதால் ஏற்றுமதியாளர்கள் வருமானத்தை பெறுவதில் சிக்கலகளை எதிர்கொண்டனர்.

                *  'மீண்டும் பட்டியலில் சிக்கினால் இலங்கை தாங்காது.'

                *  சாம்பல்நிற பட்டியலில் இடம்பெற்றதால் பாகிஸ்தானுக்கு 38 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது.

(ஆர்.சேதுராமன்_)

 பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான, நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு, இலங்கை தொடர்பான தனது பரஸ்பர மதிப்பீட்டு விசாரணையை 2025 மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இம்மதிப்பீட்டில் இலங்கையை வெற்றியடையச் செய்வதற்கான பாரிய சவால்மிக்க நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு மும்முரமாக உள்ளது.

இம்மதிப்பீட்டை சிறந்த முறையில் எதிர்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விபரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு ஊடகவியலாளர் செயலமர்வொன்றையும் அண்மையில் நடத்தியது.

      இப்பிரிவின் மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி சுபானி கீர்த்திரத்ன இந்நிகழ்வில் பேசுகையில், “நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவின் இலங்கை மீதான மதிப்பீடுகள்  அச்செயலணிக் குழுவுக்கு திருப்தியளிக்காவிட்டால், கறுப்பு அல்லது சாம்பல்நிற பட்டியலில் உள்ளடக்கப்படலாம். இத்தகைய பட்டியலில் உள்ளடக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகள் பாரதூரமானவை.

ஏற்கெனவே, 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் இலங்கை சாம்பல் பட்டியலுக்கு உட்பட்டிருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில், மீண்டும் கறுப்பு அல்லது சாம்பல்நிற பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை இலங்கை தாங்கமாட்டாதுஎன்றார்.

நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு

நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழு (The Financial Action Task Force – FATF) என்பது பணம் தூயதாக்கல்  (பணச்சலவை) மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், பேரழிவு ஆயுதங்களின் பரவல் ஆகியனவற்றை தடுப்பதற்கான, அரசுகளிடையிலான, நிதி சார்ந்த சர்வதேச செயற்பாட்டு அமைப்பாகும்.

இவ்வமைப்பின் தலைமையகம் பாரிஸ் நகரில் உள்ளது.

பணம் தூயதாக்கலை தடுப்பதற்காக ஜி7 நாடுகளின் முன்முயற்சியினால் 1989 ஆம் ஆண்டு  இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுப்பதும் இதன்நோக்கங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதங்களின் பரவலுக்கு நிதியளித்தல் என்பனவற்றைத் தடைசெய்வதற்கான சர்வதேச நியமங்களாக நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவின் பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக, அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 40 பரிந்துரைகளை நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழு முன்வைத்துள்ளது.

200 இற்கும் அதிகமான நாடுகள், (சட்டத்துறைகள்) நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளன.

இவ்வமைப்பில் நேரடியாக 38 நாடுகள் அங்கம் வகிப்பதுடன், பூகோள ரீதியில் 9 பிராந்திய வலையமைப்புகளையும் இச்செயலணி கொண்டுள்ளது.

இந்த 9 பிராந்திய வலையமைப்புகளில், சட்டவிரோத பணப்புழக்கத்திற்கு எதிரான ஆசிய-பசிபிக் குழு (.பி.ஜி) எனும் அமைப்பில் இலங்கை அங்கம் வகிக்கிறது. நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவின், இலங்கை தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் நடவடிக்கைகள் .பி.ஜி ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

கறுப்பு, சாம்பல்நிற பட்டியல்

பணம் தூயதாக்கல் மற்றும்  பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்ட திட்டங்களை அமுல்படுத்தாத நாடுகளை  நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழு  தனது கறுப்புப் பட்டியலில் அல்லது சாம்பல்நிற பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்.

இக்கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் நாடுகள் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் சர்வதேச வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும்.

சாம்பல்நிற பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது அங்கத்துவ நாடுகளை FATF  கோருவதில்லை. கறுப்புப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்படும்.

எனினும், சாம்பல் நிற பட்டியலில் உள்ள நாடுகளுக்கு எதிராக வேறு நாடுகளும் நிதிசார் நிறுவனங்களும் அதிக ஆபத்துள்ள நாடாகக் கருதி தமது சொந்த கறுப்புப்பட்டியிலில் சேர்க்கும் அபாயங்கள் உள்ளன.

சாம்பல் பட்டியலில் சிக்கிய இலங்கை

இலங்கையை 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் நிதி நடவடிக்கைக் குழு 'சாம்பல்நிற பட்டியலில்' இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுப்பதற்கான சட்ட மற்றும் நிறுவனம்சார் கட்டமைப்பிலுள்ள இடைவெளிகளை தீர்த்ததன் பின்னர் 2019ஆம் ஆண்டில் சாம்பல் நிறப்பட்டியலிலிருந்து இலங்கை வெளியேற முடிந்தது.

இரண்டாவது தடவையாக 2017  ஒக்டோபரில் சாம்பல்நிற பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து. ஐரோப்பிய ஒன்றியமும்  இலங்கையை தனது கறுப்புப் பட்டியலில்  2018 பெப்ரவரியில்  சேர்த்திருந்தது.

'ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டதைடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள பல வங்கிகள் இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதை நிறுத்திக் கொண்டன. 

உதாரணமாக, சுவீடனின் ஹாண்டல்ஸ்பேன்கன் வங்கி, இலங்கையை சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்களுக்கான பணக் கொடுப்பனவுகளை நிறுத்தியது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சுற்றுலாத்துறையினர் உட்பட இலங்கையர்கள் தமது ஏற்றுமதிகள், சேவைக்கான பணத்தை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.  

பணம் தூயதாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பானஉரிய  சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இலங்கையை தனது சாம்பல்நிற பட்டியலிலிருந்து நிதியியல் நடவடிக்கை செயலணி 2019 ஒக்டோபரில் நீக்கியது.

எனினும், 2020 மே மாதத்திலேயே ஐரோப்பிய ஒன்றியம் தனது கறுப்புப் பட்டிலிலிருந்து இலங்கையை நீக்கியது.

மீண்டும் நாம் கறுப்புப்பட்டியல் சேர்க்கப்பட்டால் இலங்கை நிறுவனங்கள், தனிநபர்கள், நிதி நிறுவனங்கள் மேலும் கூடுதலான கண்காணிப்புக்கு இலக்காகலாம் இதனால், வெளிநாட்டுக் கடன்பெறுவதற்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கும். உலகளாவிய தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை மேலும் தரமிறக்கவும்கூடும். இதனால் இரத்தினங்கள், ஆபரணங்கள் உட்பட இலங்கையர்களின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் ஆகியன பாதிக்கப்படலாம்' என  கலாநிதி சுபானி கீர்த்திரத்ன சுட்டிக்காட்டினார்.

நிதியியல் புலனாய்வுப் பிரிவு

ஒவ்வொரு நாட்டிலும் நிதியியல் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.

இலங்கையின் நிதியியல் புலனாய்வுப் பிரிவானது, நிதியியல் பரிவர்த்தனை முறைப்பாட்டு சட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் கீழுள்ள ஒரு  சுயாதீன திணைக்களமாக  நிதியியல் புலனாய்வுப் பிரிவு இயங்குகிறது.

170 நாடுகளின் நிதியியல் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து எக்மன்ட் குறூப் எனும் பெயரில், தகவல்களைப் பரிமாறுவதற்காகவும், நிதியியல் புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகளை வருடாந்த மதிப்பீடு செய்வற்காவும் இணைந்து செயற்படுகின்றன.

தொடர்புடைய 24 முக்கிய நிறுவனங்கள்:

இலங்கையில் பணச்சலவை தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுப்பதற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் தொடர்புடைய 24 முக்கிய ஸ்தாபனங்களாக சட்ட மா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைத் திணைக்களம், இலங்கை சுங்கம், நீதி அமைச்சு, நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கம்பனி பதிவாளர் திணைக்களம், பதிவாளர் நாயகத் திணைக்களம், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், சட்டவரைஞர் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், கலால் திணைக்களம், 

தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை, நிர்மாணத் தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபை, பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு, காப்புறுதி ஒழுங்குபடுத்துதல் அதிகார சபை,  மத்திய வங்கியின் கீழுள்ள திணைக்களங்களான வங்கிக் கண்காணிப்பு திணைக்களம், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களம், வங்கிசாரா நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கான திணைக்களம், வெளிநாட்டு நாணய பரிமாற்றுத் திணைக்களம், நிதியியல் புலனாய்வுப் பிரிவு ஆகியன உள்ளன.

 

3 ஆவது மதிப்பீடு

ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழுவினால் பரஸ்பர மதிப்பீட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும். இதன்படி, இலங்கை தொடர்பான 3 ஆவது அந்நியோன்ய மதிப்பீட்டு விசாரணை 2025 மார்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.

கறுப்பு அல்லது சாம்பல்நிற பட்டியலில் உள்ளடக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமானால்  நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் 40 பரிந்துரைகள் தொடர்பில் தொழில்நுட்பரீதியில் இணக்கத்தை அடைந்துள்ளதையும், நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் 11 உடனடிப் பெறுபேற்று இலக்குகளில் அளவிடப்பட்டவாறு, பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கு இலங்கையின் கட்டமைப்பானது எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை வழங்குகின்றது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும்.

இந்த  பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் ஈடுபடுவதற்கும் இம்மதிப்பீடு தொடர்பான முக்கிய புரிதல்களை  அவர்களுக்கு வழங்குவதற்கும் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தலிருந்து (.பி.ஜி) உயர்மட்ட குழுவொன்று கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

நிதிமோசடி தொடர்பான ஆசிய-பசுபிக் குழுமத்தின் இணைத் தலைவரும், கனடாவின் ஒட்டாவா, நிதித் துறை மற்றும் நிதிக் கொள்கைப் பிரிவின் பிரதி அமைச்சருமான ஜூலியன் ப்ராஸோ, நிறைவேற்றுச் செயலாளர் கோர்டன் ஹூக், பரஸ்பர மதிப்பீட்டு பணிப்பாளர் டேவிட் ஷனோன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ணம் தூயதாக்கல் தொடர் பான ஆசிய பசுபிக் குழும அதிகாரிகள் கடந்த செப்டெம்பரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம், மத்திய வங்கி அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.

-------------------------

ஜனாதிபதி, பிரதம நீதியரசர், உயர் நீதிமன்றத்தின்  நீதியரசர்கள், வெளிநாட்டு அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பணம் தூயதாக்கலுக்கெதிரான, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்; பற்றிய தேசிய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், அதிகாரிகளை இக்குழுவினர் சந்தத்து கலந்துரையாடியிருந்தனர்.

“3ஆவது பரஸ்பர மதிப்பீட்டு விசாரணையை 2025 மார்ச் மாதம் ஆரம்பிப்படுவதற்கு முன்னர், பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலுக்கு எதிரான போராட்டத்துக்காக இலங்கை வலுவான நடவடிக்கைகளை அமுல்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவதற்கு அனைத்து பொறுப்புதாரிகளும் ஒரு தேசிய உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்.

நிதியியல் உளவறிதல் பிரிவு மாத்திரம் இதை சாதிக்க முடியாது. அனைத்து பொறுப்புதாரிகள், பொதுமக்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்தே இதை செய்ய வேண்டும்என்கிறார் கலாநிதி சுபானி கீர்த்திரத்ன கூறினார்.

 பாரிய இழப்பு

பாகிஸ்தான் 3 ஆவது தடவையாக 2018  முதல் 4 வருடகாலம் சாம்பல்நிறப்பட்டிலில் சேர்க்கப்பட்டிருந்தது.  பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளி;த்தலை தடுப்பதற்கு ஏற்ற பொறிமுறைகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என எவ்..ரி.எவ். தீர்மானித்த பின்னர், 2022 ஒக்டோபரில் சாம்பல்நிற பட்டிலியிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

2008 முதல் 3 தடவைகள் பாகிஸ்தான் சாம்பல்நிற பட்டியலில் இருந்தகாலத்தில் அந்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 38 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என 2021 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை சாம்பல்நிற பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த காலத்தில் இலங்கைக்கு எவ்வளவு ஏற்பட்ட இழப்பு என்பது தெரியவில்லை. இது தொடர்பில் முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் தொழிலுக்காக வருகை தரும் ரஷ்ய...

2024-02-23 20:52:33
news-image

நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன...

2024-02-23 11:46:06
news-image

ஆயுளை முடித்துக்கொண்ட கிராண்பாதர்

2024-02-22 18:41:32
news-image

தொழிலாளர்களை தேடிச் செல்லும் பிரதிநிதிகள்!

2024-02-22 17:37:26
news-image

சவாலாக மாறுகிறதா சர்வதேச கடன் மறுசீரமைப்பு? 

2024-02-21 19:01:04
news-image

உட்கட்சி பூசல்கள் தமிழ் மக்களின் அரசியல் ...

2024-02-21 13:51:47
news-image

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி...

2024-02-21 13:12:29
news-image

நவால்னி சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா ?...

2024-02-21 12:52:32
news-image

மலையக மக்களும் அஸ்வெசும திட்டமும்

2024-02-20 11:42:52
news-image

இலங்கை கடன்களில் மாத்திரம் தங்கியிருக்கும் நிலை...

2024-02-20 11:36:03
news-image

சித்திரை புத்தாண்டுக்குப்பிறகு பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதி...

2024-02-20 02:41:33
news-image

அரசியலும் ஆன்மிகமும் ஒருமித்து பயணிக்கும் முயற்சி...

2024-02-19 17:18:48