(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அந்நாட்டு தொழிற்கட்சி அறிவித்துள்ளது.

பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் சுயாதீன தன்மை தொடர்பில் இவ்வாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆராயப்பட உள்ளதாக ஜெரமி கோர்பின் குறிப்பிட்டுள்ளார். 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விஷேட கூட்டம் ஒன்றும் நடாத்தப்பட உள்ளது. 

இந்த கூட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உறுதி மொழி வழங்கிய விடயங்கள் மற்றும் ஜெனிவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் பாராளுமன்றதில் பேசப்படும் விடயங்கள் மற்றும் தீர்மானங்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு கோரிக்கையாக முன் வைத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தப்பட உள்ளதாக தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பிரித்தானி தொழிற்கட்சி அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இலங்கைக்கு உறுதிமொழிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.