ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! (இது நம்ம ரேடியோ)

01 Dec, 2023 | 07:15 PM
image

இசையின் தாகத்தில் இன்னுமொரு இசைப்பிரசவத்திற்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்த வேளையில், உலகாளும் தமிழின் இன்னுமொரு வகிபாகத்தை உலகெங்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட Capital FM டிசம்பர் 01ஆம் திகதியான இன்று தனது 6வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

நேயர்களுக்கு புதுவிதமான மாற்றத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டு “இது நம்ம ரேடியோ” எனும் மகுடவாசகத்தோடு Trymas Media வலையமைப்பினால் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி 94.0 மற்றும் 103.1 பண்பலைவரிசை வாயிலாக வானலையில் தன் கன்னிப்பயணத்தை ஆரம்பித்ததோடு, அறிமுகமாகும்போதே நாடு பூராகவும் மற்றும்  www.capitalfm.lk எனும் இணையத்தளம் வாயிலாகவும், உலகளவில் ஒலிபரப்பாகிய முதல் தனியார் வானொலி என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

ஆரம்பிக்கும்போதே திறமைமிக்க தொழில் வல்லுநர்களோடு களத்தில் இறங்கிய Capital வானொலி முதலாவது பிறந்த நாளின் முன்பாகவே, எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை தன்னகம் சுவீகரித்துக்கொண்டதுடன் ஒவ்வொரு இல்லங்களிலும் இசை இளவரசனாக மகுடம் தரித்தது. 

உலகையே தன் குரலால் ஈர்க்கும் அறிவிப்பாளர்கள், புதிய அனுபவங்களோடு உங்களை பயணிக்க வைக்கும் நிகழ்ச்சிகள், நேயர்களின் ரசனையறிந்த பாடல்களோடு புதியதொரு இசையுலகுக்கு உங்களை அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது நம்ம ரேடியோ Capital FM.

நிறுவனத் தலைவர் திரு.வின்சேந்திரராஜன் அவர்களின் ஆலோசனையில் பணிப்பாளர்களான திருமதி சுமதி வின்சேந்திரராஜன், நிதர்சன் வின்சேந்திரராஜன், விதுர்சன் வின்சேந்திரராஜன் ஆகியோரின் வழிகாட்டலிலும்; பொது முகாமையாளர் ஷியா உல் ஹசன் தலைமையிலும், தலைமை நிர்வாகி மற்றும் இசைக்கட்டுப்பாட்டாளர் S.T.ரவூப், சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.ஜபீர், தயாரிப்பு முகாமையாளர் திருமதி ஹம்சி மாலன் உட்பட திறமைமிக்க நிகழ்ச்சி பிரிவினர், செய்திப் பிரிவினர், சந்தைப்படுத்தல், திட்டமிடல் விரிவாக்கல், தொழில்நுட்ப மற்றும் மனிதவள குழுவினர் ஆகியோரின் மிகச்சிறந்த பங்களிப்புடன் Capital FM இன்று எதிர்பார்த்த அடைவுமட்டத்தை எட்டி நேயர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி ஆறாவது அகவையை தொட்டிருக்கின்றது.

நேயர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பாடல் தெரிவுகளை, தரம் பிரித்து தொகுத்து வழங்குவதிலும், அத்தோடு நேயர்களின் நாடித்துடிப்பை அறிந்து காலத்துக்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து தருவதிலும் Capital FMக்கு எப்போதுமே தனியிடம் உண்டு.

பெப்ரவரி 2023இல் பல புதுமைகளை புகுத்தி ஏராளமான மாற்றங்களை உள்ளடக்கி “தைப்பூசத்தில் புது சுவாசமாய் கெப்பிட்டல் வானொலி தைப்பூசத்தில் தமது நிகழ்ச்சி நிரலை படைப்பாற்றல் மிக்கதாய் மாற்றி இன்னொரு பரிணாமம் கண்டது.

இன்று நேயர்களின் இரசனையை அறிந்து, நிகழ்ச்சிகளுடைய நேரங்களை குறைத்து பாடல்களை அதிகரித்து வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பல புதிய நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி அனைவரினதும் மனம் கவர்ந்த வானொலியாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில், இவ்வாண்டில் கெப்பிட்டல் உருவாக்கித் தந்த இன்னுமொரு பிரமாண்டம் “காற்றலை கதைகளாகும்.”

சமூகத்தில் இருக்கும் தாக்கங்களையும், மக்களிடம் இருக்கும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் அத்தோடு புதுவிதமான கற்பனைக் கதைகளையும் தினம் தினம் வானொலி நாடகங்களாக இரவு 08 மணி முதல் 8.45 வரை உங்களிடம் தந்துகொண்டிருப்பதோடு இன்று வெற்றிகரமாக 150 அத்தியாயங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.

கெப்பிட்டலின் இந்த காற்றலை கதைகள் தென்னிந்திய Radio Rooms செயலியில் இடம்பிடித்திருப்பது எமது படைப்பாற்றலின் தரத்தினை பறைசாற்றும் இன்னுமொரு சரித்திரம் என்றால் மிகையாகாது.

வாரஇறுதி நாட்களை வெறுமனே பாடல்களோடு மட்டும் கடந்து சென்றுவிடாமல், பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கென்றே தரம் பிரிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன. அதில் முக்கியமாக அறிவியலோடு போட்டி போட்டு அதிசயங்களை அழகாகவும், 150 வாரங்களை கடந்து பிரம்மாண்டமாகவும் தந்துகொண்டிருக்கின்றது “டொக்யுமன்டரி தமிழ்”. 

அத்தோடு இலங்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும், அறிவிப்பாளர்களாக பங்குபெறவைத்து அவர்களின் அனுபவங்களையும், எதிர்கால சாதனையாளர்களுக்கான வழிகாட்டல்களையும் வழங்குவதோடு, துறைசார் ஆலோசனைகளையும் வழங்கி இன்று பல்வேறு கலைஞர்களுடைய அபிமான நிகழ்ச்சியாகவும் மாறியிருக்கிறது Celebrity RJ.

காற்றலை வழியாக ஒலிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் புதிய உலகை நோக்கி எம்மை அழைத்து செல்கின்றன. அதில் வாகனங்களை பராமரிப்பது தொடர்பிலும், அதில் ஏற்படக்கூடிய பழுதுகளை தாமாகவே சரிசெய்வதற்கும் வாகன துறைசார் நிபுணர்களின் அறிவுரைகளை வழங்கும் நிகழ்ச்சியாக Vehicle Clinic நிகழ்ச்சியும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இலைமறைக்காயாய் இருக்கின்ற இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து பிரகாசமிக்க நட்சத்திரங்களாக உருவாக்கி, புதுக்குரல் புரட்சி செய்துகொண்டிருக்கும் அறிவிப்பாளர் அதிதி நிகழ்ச்சியும் கெப்பிட்டலின் இன்னமொரு அடையாளமாக திகழ்கின்றது. 

அத்தோடு இளம் கவிஞர்களை உருவாக்கவும், புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், புத்தக வெளியீடுகள் தொடர்பான நிகழ்வுகளை வெளியுலகிற்கு கொண்டுசேர்க்கவும் புதிய முயற்சியோடு “தீராநதி” நிகழ்ச்சியும் காற்றலையில் கவி வடித்துக்கொண்டிருக்கின்றன.

நிகழ்ச்சிகளை கடந்து செய்திகளை உண்மையாகவும் உடனுக்குடனும், நம்பகமாகவும் வழங்குவதில் கெப்பிட்டல் என்றுமே பின் நின்றதில்லை. 

அந்த வகையில் கெப்பிட்டல் செய்திகள் “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற மகுடவாசகத்தோடு திறம்பட இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அதேநேரம் வானலை கடந்து கெப்பிட்டலை நேரடியாக நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மக்களோடு ஒன்றித்து பயணிக்க வைப்பதிலும், திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினருக்கு தனியிடமுண்டு.

கடந்து வந்த பாதையில் வசதிகளின்றி இன்னல்கள் அனுபவித்த மக்களுக்கும் உதவிகள் வழங்க “கெப்பிட்டல் காருண்யம்” மூலமாகவும் நிவாரணங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த வானொலியாகவும் தன்னை நிலைநிறுத்தியதுடன் கடந்த சில வருடங்களில் அரச விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவின் கீழ் அதிகமான விருதுகளை அள்ளி மக்களின் மனம் கவர்ந்த வானொலியாகவும் புது அத்தியாயம் படைத்திருக்கிறது.

இந்த வெற்றிப்பாதையில் கெப்பிட்டல் கண்ட சாதனைகள் ஏராளம் ஏராளம். இத்தனை சாதனைகளுக்கும் நேயர்களாகிய உங்களது அன்பும், ஆதரவுமே காரணமாக அமைந்திருக்கிறது. எங்களின் வளர்ச்சிப்பாதையில் உறுதுணையாக நின்று தோள் கொடுத்த நேயர்களாகிய உங்களுக்கும், நவீன டிஜிட்டல் யுகத்தில் பூரண ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் Capital FM, Capital TVஇன் அன்புக்குரிய டிஜிட்டல் பயனாளர்கள் அனைவருக்கும் மற்றும் விளம்பரதாரர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளை சொல்லி அகமகிழ்கிறது நம்ம ரேடியோ Capital FM.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right