இளம் கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் வகையில் விசேட நிகழ்ச்சியொன்று அண்மையில் மன்னார் மாவட்ட செலயகத்தின் JICA மண்டபத்தில் நடைபெற்றது.

YOUth CREATE நிழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘இளம் கலைஞர்களின்  கருத்துக்கள அரங்கம்’ என்ற நிகழ்ச்சியை கெயார் சர்வதேச நிறுவனமும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ். தேஷப்பிரிய கலந்து கொண்டார். 

கலாசாரம், நல்லிணக்கம், கல்வி, கலை, அரங்கம் மற்றும் வெளிப்பாடுகள் ஆகியவற்றின் ஊடாக நாடு முழுவதிலும் சகவாழ்வினை உருவாக்குவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயற்பட்டுவரும் YOUth CREATE திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். மேலும், இளைஞர்கள், கலைஞர்கள், கலாசார செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக மனித உரிமை, ஜனநாயகம் மற்றும் பல்லினத் தன்மையை மதிக்கும் சிவில் சமூகமொன்றை கட்டியெழுப்புவதும் இத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும். 

கிராமியக் கலை, கருத்துக்கள அரங்கம், மேடை நாடகம், நடனம், சிறுகதை எழுத்தாக்கம் மற்றும் குறந்திரைப்படம் போன்ற அறங்கேற்ற மற்றும் கட்புலக் கலை வடிவங்களுடாக ஜனாநாயம், மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கலைப் படைப்புக்களை தயார் செய்து அவற்றை பரந்தளவில் பிரபல்யமடையச் செய்வது இத்திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாகும். 

அந்த அடிப்படையில் இத்திட்டத்தின் மூலம் பயிற்றப்பட்டு பல பிரதேசங்களில் ஆற்றுகைகளில் ஈடுபட்டு வரும் மன்னார் மாவட்ட இளம் கருத்துக்கள கலைஞர்களின் திறன்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்யும் ஒரு சந்தர்ப்பமாக இந் நிகழ்வாக அமைந்தது. 

இந்நிகழ்வின் போது மேடையேற்றப்பட்ட கருத்துக்கள நாடகமானது கலந்து கொண்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்ட ஒரு அம்சமாகும். நாட்டின் சமாதானத்திற்கு ஒரு பிரதான முட்டுக்கட்டையாக விளங்கும் மொழிப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தந்தையை இழந்த நிலையில் வறுமையில் தவிக்கும் ஒரு குடும்பத்தினை சித்திரிக்கும் இந்நாடகம் அனைவரையும் கண் கலங்க வைத்தது. 

மேலும் இத் திட்டதின் மூலம் பயிற்றப்பட்ட குறுந்திரைப்படக் கலைஞர்களினால் தயாரிக்கப்பட்ட ஒரு சில திரைப்படங்களும் இந் நிகழ்வின் போது திரையிடப்பட்டன. இந்நிகழ்வினையொட்டி சமாதானம் நல்லிணக்கம் போன்ற கருப்பொருட்களை சித்திரிக்கும் வiயில் ஓர் ஓவியக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த பிரதம அதிதி மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ் தேஷப்பிரிய, இனம், மொழி, கலாச்சாரம் என்பவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைப்பது நாட்டின் முக்கிய விடயமாகும். இவ்வாறான திட்டங்கள் ஊடாக நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி வன்முறையற்ற சமூகத்தினை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார். மாவாட்ட செயலாளர் தமிழ் மொழயில் உரையாற்றியது எல்லோரையும் கவர்ந்த ஒரு விடயமாக அமைந்தது. 

இந்நிகழ்வில் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச கலைஞர்கள் மற்றும் தனியார் வங்கித் துறை ஊளியர்களும் கலந்து கொண்டனர்.

YOUth CREATE திட்டத்தினமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, காலி, மொனராகலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கெயார் சர்வதேச நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. 

இத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள youthcreate.lk என்ற இணையத்தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.