ஏழு ஸ்வரங்களின் ரூபமான இசைச் சகாப்தம் வாணி ஜெயராம்!

30 Nov, 2023 | 03:57 PM
image

மறைந்த பின்னணி பாடகி வாணி ‍ஜெயராமின் 78வது ஜனன தினம் இன்று! 

காந்தக் குரலால் பல கோடி ரசிகர்களை ஈர்த்தவர் இசைவாணி வாணி ஜெயராம். தென்னகம் கண்ட தேமதுரக்குரலுக்கு சொந்தக்காரர். அன்னை கலைவாணியின் பரிபூரண இசைவரம் பெற்ற இந்திய பாடகிகளுள் பிரதானமானவர்.

"அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் இவர் பாடிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்", "கேள்வியின் நாயகனே", "பாலைவனச்சோலை" படத்தில் இடம்பெற்ற "மேகமே மேகமே பால் நிலா தேயுதே", "தீர்க்க சுமங்கலி"யில் இவர் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்", சங்கராபரணம் படத்தில் இடம்பெற்ற அனைத்து  பாடல்களும் உள்ளடங்கலாக இவர் பாடிய ஏராளமான பாடல்கள் காலத்தால் அழியாத கானங்களாகும்!

வாணி ஜெயராம் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதிக்கு மகளாக 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் கலைவாணி.

இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி என்ற ஹந்தி திரைப்படத்தின் மூலம் ஆரம்பமானது. அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வந்தார். 

இவர் தமிழில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு 'தீர்க்கசுமங்கலி' என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடினார். 

தொடர்ந்து "ஏழு ஸ்வரங்களுக்குள்", "கேள்வியின் நாயகனே", "என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம்", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "கவிதை கேளுங்கள்" போன்ற கடினமான பல பாடல்களை தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம், உருது, ஒடிஸா என பல இந்திய மொழிகளில் பாடி, இசையால் தன் ஆளுமையை செலுத்தியவர் ஏழு ஸ்வர கானக்குயில் வாணி ஜெயராம் அம்மையார். 

இவர் திரையிசை, பொப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்கள் பல இசை வடிவங்களில் பாடியுள்ளார்.

இந்திய திரைப்படப் பாடல்களுக்கு அப்பால்  தனி அல்பங்களுக்காக பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 

இவரது அபாரமான இசைப் புலமையினால் "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என்று அழைக்கப்படுகிறார். 

வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். 

ஹிந்தியில் வாணி அறிமுகமாகி மராத்தி ரசிகர்களை கவர்ந்தபோது, இவரது இனிமையான குரல் கேட்டு லதா மங்கேஷ்கர், ஆஷா போஷ்லே போன்ற பிரபல பாடகிகள்  சற்று ஆடித்தான் போயினர்.

கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என எந்த இசையையும் அதன் தொனி மாறாமல் பாடுவதில் வல்லவர் வாணி. 

அன்பு, தன்னடக்கம், பணிவு, தலைக்கணமின்மை போன்ற நற்பண்புகளுக்கு உரியவர். 

வாணி ஜெயராம் பாடும் நிலா  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் ஆகிய முன்னணி பாடகர்களோடு இணைந்து பாடிய பாடல்கள் என்றென்றும் இனிமையானவை; காலத்தால் அழியாத காற்றின் ஒலிகள்! 

இலங்கைக்கு பல தடவைகள் வாணி விஜயம் செய்து இசைப் பணியாற்றியுள்ளார். 

1980இல் இலங்கை பேராதனை அக்பர் மண்டபத்திலும், 1990இல் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். 

இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இலங்கையின் பிரபல சிங்கள மொழி திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா  இணைந்து நடித்த பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெறும் இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ பாடலை மாலினி பொன்சேகாவுக்காக பின்னணி பாடி இலங்கை மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார் வாணி. 

வாழ்நாளில் எண்ணற்ற தேசிய, மாநில மற்றும் ஏனைய விருதுகளை பெற்று உச்சபட்ச சாதனைகளை நிலைநாட்டி, அன்னை கலைவாணியின் பரிபூரண அருளைப் பெற்ற இசைப் பேரரசி வாணி ஜெயராம் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மறைந்து திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நீங்கா சோகத்தை விதைத்தார். 

"இசையுலகில் வாணி ஜெயராம் ஏழு ஸ்வரங்களின் ரூபமான இசைச் சகாப்தம்!" 

- எஸ் கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right