பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக் கல் அகழ்வு

29 Nov, 2023 | 02:51 PM
image

இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை, அதன் அழகிய நிலப்பரப்புகள், வளமான கலாச்சாரம் மற்றும் அது அள்ளித்தரும் அற்புதமான இரத்தினங்களுக்கு பெயர் பெற்றது. தேசத்தின் அடையாளத்திற்கும் அதன் பொருளாதார செழுமைக்கும் ஒரு மூலாதாரமாக இரத்தினச் சுரங்கத் தொழில் செயற்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற சிலோன் நீலமணிகள் (Ceylon sapphires) முதல் மயக்கும் புறாவின் இரத்த மாணிக்கங்கள் (pigeon's blood rubies) வரை, இந்த விலைமதிப்பற்ற கற்கள் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை.

எனினும், இந்தத் தொழிற்துறையின் பளபளப்பான மேற்பரப்பின் கீழ், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய கரிசனைகள் காணப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. பூமிக்கு அடியிலுள்ள மாணிக்கங்களை அகழும் தொழிலாளர்கள், அகழ்விற்குப் பின்னர் குழிகளை மூடாமல் செல்கின்றனர். எஞ்சியிருக்கும் குழிகள், பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களின் உணவுத்தேவைக்காக பயிர்களை வளர்க்க பயன்படும் வயல்களில் காணப்படுவதானது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மரணப் பொறியாகிவிட்டது. அவ்வாறான ஒரு நிலை, பதுளை மாவட்டத்தின் பசறை பல்லேகம பிரதேசத்தில் காணப்படுகின்றது. Earth Journalism Networkஇன் சுற்றுச்சூழல் அறிக்கையிடல் திட்டத்தின் கீழ், இதுபற்றிய ஆராய்ந்து தகவல்களை பெற்றுக்கொண்டோம்.

திறந்த நிலையில் காணப்படும் நீர் நிரம்பிய குழி – ஆபத்தான பொறி

"நான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன், மாடுகளையும் வளர்த்து வருகிறேன். மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் குழிகளை மூடாமல் செல்கின்றனர். எமது கால்நடைகள் சில சமயங்களில் தடுமாறி அதற்குள் விழுந்து இறக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண யாரும் இல்லை. மக்கள் கூட இந்தக் குழிகளில் விழுகின்றனர். இந்தக் குழிகளில் இரண்டு முறை எனது மாடுகள் விழுந்தன, ஆனால் நாங்கள் அதை சரியான நேரத்தில் கவனித்ததால் மீட்டுவிட்டோம். இந்த மாடுகளை நம்பித்தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. இந்த மாடுகளை நம்பித்தான் எமது வாழ்வாதாரம் உள்ளது. அவற்றை இழப்பது எமக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்" என மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி எம்.ஏ.டி. அமரசிங்க கூறினார்.

"இந்தக் குழிகளை பாருங்கள்.  இவற்றில் நீர் நிறைந்து, தாவரங்கள் வளர்ந்து காடாகிவிட்டன. எங்கு குழிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. சில குழிகள் கடந்த மூன்று வருடங்களாக மூடப்படாமல் உள்ளன. சில குழிகள் 10 வருடங்களாக மூடப்படாமல் உள்ளன” என்றார், விவசாயியான ஆர். எம். ரத்னாயக்க. 

 ‘அண்மையில் இந்தக் குழிக்குள் பசுவொன்று விழுந்து இறந்துவிட்டது. மாடுகள் மட்டுமன்றி, நாய்கள், கோழிகள் ஏன் மனிதர்களும் இந்தக் குழிக்குள் விழலாம். மூடப்படாத குழிகளில் நீர் தேங்குவதால், நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துவிட்து" என அந்தக் கிராம வாசியான கிரிபண்டே வருத்தம் தெரிவித்தார்.

பல்லேகம கிராமவாசியான சுமனா அபேசிங்கவின் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீட்டில் கட்டமைப்பு மாறிப்போயுள்ளதென அவர் குறிப்பிட்டார். மாணிக்கக் கல் அகழ்வின் போதே இந்த விரிசல்கள் ஏற்பட்டதாக அவர் குற்றஞ்சுமத்தினார். குழிகளை மூடாமல் செல்லும்போது, பெருமளவான நீர் அதற்குள் தேங்கியிருப்பதால் கிணற்று நீரும் வற்றிப்போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இறுதியில் அவர் விவசாய திணைக்களத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு வந்தபோது, அகழ்வுப் பணியாளர்கள் அங்கு வரவில்லை என்றும், அதிகாரிகள் சென்றபின்னர் மீண்டும் அகழ்வில் ஈடுபட்டனர் என்றும் குறிப்பிட்டார். மூடாத குழிகள் மழைக்காலத்தில் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் சுமனா சுட்டிக்காட்டினார். மேலும், முன்னர் சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது இந்த குழிகளுக்குள் தவறி விழுந்ததாகவும், அயலவர்கள் கவனித்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் சுமனா எம்மிடம் குறிப்பிட்டார். 

அகழ்வாளர்கள் மறுக்கின்றனர்

உள்ளூர் சமூகத்தின் இந்த குற்றச்சாட்டுகளை மாணிக்கக் கல் அகழ்வாளர்கள் மறுக்கின்றனர். மாணிக்கக் கல் கிடங்கு ஒன்றின் உரிமையாளரான பிரமோத் திக்ஷனவிடம் சுமார் 15 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பிரமோத்தின் அகழ்வு நடவடிக்கைகளில் பொதுவாக பூமியின் ஆழத்திலிருந்து மண் படைகளை வெட்டுதல், அதனை அங்கிருந்து மேற்பரப்பிற்கு கொண்டுவருதல், தரப்படுத்துதல், கழுவுதல், சளித்தல் என பல படிமுறைகளைக் கொண்டுள்ளது.  

"நெல் வயலாக இருந்த இந்த இடத்தில்தான் நாங்கள் தொழிலை நடத்துகிறோம். விவசாயத் திணைக்களம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றே இதனை முன்னெடுக்கின்றோம். தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையிடம் மீளப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறான வைப்புத் தொகையொன்றையும் செலுத்துகின்றோம். இந்த அனுமதிகள் ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இந்த நிலத்தை உள்ளூர் நில உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்துள்ளேன். ஐந்து அடுக்கு மண்ணை ஊடுருவிச் சென்றால், சிறிய மாணிக்கக்கல் படிம அடுக்குகள் காணப்படுகின்றன. எனினும், வெவ்வேறு பகுதிகளில் ஆழம் மாறுபடும். இந்த பகுதியை பொறுத்தவரை, பொதுவாக 5 அடி ஆழத்தில் காணப்படுகிறது. 25 முதல் 35 அடி ஆழத்திற்குச் செல்கையில் பல்வேறு படிமங்களை பெற்றுக்கொள்ளலாம். பிரதேசத்தின் புவிசார் அமைப்புகளுக்கு ஏற்ப இது மாறுபடும். இறுதி படிம அடுக்குகளை பெற்றுக்கொள்ளும்வரை தொடர்ந்து அகழ்வில் ஈடுபடுவோம்” என்று திக்ஷான விளக்கினார்.

திக்ஷவின் கூற்றுப்படி, இரத்தினக்கல் அகழ்வுக்குப் பிறகு தளத்தை அதன் முந்தைய நிலைக்கு மாற்றியமைத்து, அதனை விவசாயத் திணைக்களம் மேற்பார்வை செய்த பின்னரே அடுத்த சுரங்கத்திற்கான அனுமதி வழங்கப்படும். மண் படிமங்களை கழுவும்போது அந்த சேற்றுநீர் வயல்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் திக்ஷன குறிப்பிட்டார். 

இந்தத் துறை மிகவும் இலாபகரமானது என்பதால் விரைவாக அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் மாணிக்கக் அகழ்வில் பலர் ஈடுபடுகின்றனர்.

திறந்த நிலையில் குழிகள் காணப்படுவதை அரசாங்கமும் மறுக்கின்றது. குறித்த பிரதேசத்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் மூடப்படாமல் காணப்படும் அகழ்வுக்குப் பின்னரான குழிகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய இரத்தினக் கல் ஆபரண அதிகார சபையிடம் தகவல் கோரப்பட்டது. எனினும், அவ்வாறு மூடப்படாத குழிகள் இல்லையென தமக்கு செயற்பாட்டு அதிகாரி அறிக்கையளித்துள்ளதாக தேசிய இரத்தினக் கல் ஆபரண அதிகார சபை பதில் வழங்கியுள்ளது. அனுமதிப் பத்திரம் பெற்றவர்களே, குழிகளை மூடுவதற்கு பொறுப்பு என்றும் பதில் வழங்கியுள்ளனர்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இவ்வாறு பதில் வழங்கிய போதும், 10 வருடங்களுக்கு மேலாகவும் மூடப்படாத நிலையில் அங்கு குழிகள் காணப்படுவதை, பிரதேச மக்கள் எமக்குக் காட்டினர். 

மாணிக்கக் கல் அகழ்வு தொழிலுக்காக, சுமார் 6 கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்து சின்னையா லிங்கராஜ் வருகின்றார். நான்கு பேர் கொண்ட குடும்பத்தை பராமரிப்பதாகக் குறிப்பிட்ட லிங்கராஜ், நாளாந்தம் 2000 ரூபாயை பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.  

தீக்ஷனவிற்கு சொந்தமான மற்றுமொரு குழி அருகில் காணப்பட்டது. எனினும், அங்கு பாதுகாப்பு அறிவிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர். 

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள்

சூழலியலாளரான ஜயந்த விஜேசிங்கவின் கருத்துப்படி, மாணிக்கக் கல் அகழ்வின் போது ஒழுங்குறுத்தப்படாத மற்றும் நிலையற்ற நடைமுறைகளை பின்பற்றும்போது, அது நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழிகளுக்குள் மனிதர்கள் அல்லது விலங்குகள் விழுந்து இறக்கின்றமை, மண்சரிவு மற்றும் மண்ணரிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றன. 

“குழிகள் திறந்த நிலையில் உள்ளமையானது, நுளம்புப் பெருக்கத்திற்கும் வழிவகுப்பதோடு, அதனால் டெங்கு போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கின்றது. நிலத்தடியை ஆழமாக அகழும்போது அதனால் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும், கிணறுகள் வறண்டு போவதற்கும் நீரோடைகள் வறண்டு போவதற்கும் காரணமாகின்றது.

மாணிக்கக் கல் அகழ்வினை நிலைபேறுமிக்க முறையிலும், ஒழுங்குறுத்தப்பட்ட முறையிலும் மேற்கொள்ள வேண்டும். மண் மற்றும் தாவரங்களைக் கொண்டு அகழ்வுப் பிரதேசங்களை மீளவும் பழைய நிலைக்கு கொண்டுவருவது மிகவும் முக்கியமானது. சுற்றுச்சூழல் மற்றும் ஏனைய விடயங்களை தணிப்பதற்கு இந்த அணுகுமுறை மிகவும் அவசியமாகும்” என ஜயந்த விஜேசிங்க வலியுறுத்தினார்.

Climate Action Now Sri Lankaவைச் சேர்ந்த மற்றுமொரு சூழலியலாளரான மெலனி குணதிலக்கவும் இக்கருத்துடன் உடன்படுகின்றார். “வர்த்தக நடவடிக்கைகளை பொறுப்பற்ற முறையில் முன்னெடுக்கும்போது, அது சுற்றுச்சூழல் உரிமைகளை மட்டுமன்றி மக்களின் சமூக உரிமைகளிலும் தாக்கம் செலுத்துகின்றது. மாணிக்கக் கல் அகழ்வின் பின்னர் குழிகளை மூடி, அதன் அருகிலுள்ள பிரதேச மக்களுக்கு அது எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துவது அகழ்வாளர்களின் பொறுப்பாகும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை விளைவிக்காமல் அகழ்வுப் பகுதிகள் மூடப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு அரச நிறுவனங்களுக்கும் உண்டு”.

அரசாங்கம் என்ன கூறுகின்றது

1993 ஆம் ஆண்டின் இரத்தினம் மற்றும் ஆபரணச் சட்டத்தின் கீழ், மாணிக்கக்கல் தொழிற்துறையின் அபிவிருத்தி இரத்தினக் கற்கள் போன்ற வளங்களை அகழ்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இரத்தினக் கற்கள் மற்றும் சுரங்கங்களை பரிசோதிப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம். அதிகாரிகள் குறித்த பகுதிகளுக்குச் சென்று ஆராய்வதோடு, வைப்புப் பணமும் அறவிடப்பட்டே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அகழ்வின் பின் எஞ்சியிருக்கும் குழிகளை மூடுவதற்கு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு அனுமதிப்பத்திரத்தின் கீழ் பல (7-8) அகழ்வுகளை மேற்கொள்ள முடியும். கடந்த காலங்களில் குழிகள் பெரும்பாலும் மூடப்படாமல் விடப்பட்டிருந்தாலும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. மேலும் இரவில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத அகழ்வுகளின் பின்னரே பெரும்பாலும் திறந்த நிலையில் குழிகளை விட்டுச் செல்கின்றனர். இது எமது அதிகாரசபையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இடம்பெறுகின்றது.  மழை பெய்யும்போதும் குழிகளை மூடுவது சிரமமான காரியமாகும். காரணம், மழை பெய்யும்போது அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாது” என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் (நிலம், அகழ்வு மற்றும் சுற்றுச்சூழல்) ஜி.டபிள்யூ. அமரசிறி தெரிவித்தார்.

 

தற்போது வழங்கப்பட்டுள்ள 6000 அனுமதிப்பத்திரங்கள் ஊடாக, சுமார் 40,000 இரத்தினச் சுரங்க அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை மூடாமல் சென்றால், அங்கு குழிகள் மாத்திரமே காணப்படும். ஆகவே, அவ்வாறான நிலை இல்லை.  -    ஜி.டபிள்யூ. அமரசிறி - தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் (நிலம், அகழ்வு மற்றும் சுற்றுச்சூழல்)  

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விராஜ் டி சில்வாவின் கருத்துப்படி, இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையானது, 2025ஆம் ஆண்டளவில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் 2 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும், இத்துறை பொறுப்புடன் நிர்வகிக்கப்படாவிட்டால், கைவிடப்பட்ட குழிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உள்ளூர் சமூகங்கள் மீதான தாக்கம்  என்பன இத்துறையின் பொருளாதார செழுமைக்கு தடையாக அமையலாம்.

சூழலியலாளர் மெலனி கூறியவாறு “இவ்வாறான புறக்கணிப்புகளுக்கு தற்போதைய தலைமுறை மாத்திரம் விலைகொடுக்கவில்லை. அது எதிர்கால சந்ததிக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான விதிகள், பொறுப்பான அகழ்வு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான தெளிவான கட்டமைப்பு அவசியம்”

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன...

2024-02-23 10:41:05
news-image

ஆயுளை முடித்துக்கொண்ட கிராண்பாதர்

2024-02-22 18:41:32
news-image

தொழிலாளர்களை தேடிச் செல்லும் பிரதிநிதிகள்!

2024-02-22 17:37:26
news-image

சவாலாக மாறுகிறதா சர்வதேச கடன் மறுசீரமைப்பு? 

2024-02-21 19:01:04
news-image

உட்கட்சி பூசல்கள் தமிழ் மக்களின் அரசியல் ...

2024-02-21 13:51:47
news-image

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி...

2024-02-21 13:12:29
news-image

நவால்னி சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா ?...

2024-02-21 12:52:32
news-image

மலையக மக்களும் அஸ்வெசும திட்டமும்

2024-02-20 11:42:52
news-image

இலங்கை கடன்களில் மாத்திரம் தங்கியிருக்கும் நிலை...

2024-02-20 11:36:03
news-image

சித்திரை புத்தாண்டுக்குப்பிறகு பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதி...

2024-02-20 02:41:33
news-image

அரசியலும் ஆன்மிகமும் ஒருமித்து பயணிக்கும் முயற்சி...

2024-02-19 17:18:48
news-image

அரசியல் மயமாகும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்...

2024-02-19 02:01:40