ஹேவா­ஹெட்டை  ரொக்வூட்   தோட்­டத்தின் லயன் குடி­யி­ருப்பு தொகுதி வீடொன்றில்  மர்­ம­மான முறையில்  இளம் தாய் ஒருவர்  படு­கொலை செய்­யப்­பட்டு  வீட்­டி­னுள்­ளேயே புதைக்­கப்­பட்டு   கொங்கி­றீட்டால் மூடப்­பட்­டி­ருந்த   புதை­குழி ஒன்று நேற்று முன்­தினம்  தோண்­டப்­பட்டு சடலம் மீட்­கப்­பட்­டது.

வலப்­பனை மாவட்ட நீதிவான் நீதி­மன்ற  நீதிவான் எஸ்.எல்.எம்  விஜ­ய­சிங்க முன்­னி­லையில்  ஹங்­கு­ரான்­கெத்த பொலிஸார்  மற்றும் நுவ­ரெ­லியா மாவட்ட  சட்ட வைத்­திய அதி­காரி முதித்த குடா­க­மகே முன்­னி­லை­யி­லேயே புதை­குழி தோண்­டப்­பட்­டது.

இதன்­போது  குமார் சுமித்­ரா  (வயது 28) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். சடலம்  உற­வி­னர்­களால் அடை­யாளம் காட்­டப்­பட்­டது.

சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் தோட்டப் பகு­தியை சேர்ந்த  நபர் ஒருவர் பொலி­ஸாரால் கைது செய்யப்பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தலை­ம­றை­வா­கி­யுள்­ளார். சம்­பந்­தப்­பட்ட நபரை பொலிஸார் கைது செய்யும் நோக்­குடன் வலை­வி­ரித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது,

சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் கணவர் வெளிப்­பி­ர­தே­சத்தில் தொழில் செய்து வரும் ­நி­லையில் சம்­பவ தினத்­திற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன் சகாக்­க­ளுடன் குறித்த தோட்ட குடி­யி­ருப்பு பகு­திக்கு வரு­கை ­தந்து தங்­கி­யி­ருந்த­தா­கவும் பின்னர் தனது 3 வயது மகனை பாட்­டி­யிடம் விட்­டு­விட்டு தலை­ம­றை­வா­ன­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

சில நாட்­க­ளுக்கு பின்னர் குறித்த பெண்ணை காணாது சந்­தேகம் கொண்ட உற­வி­னர்கள் மற்றும் பிர­தேச மக்கள் தோட்ட உத்­தி­யோ­கஸ்­தர்கள் அவ­சர பாது­காப்பு பொலிஸ் பிரி­வுக்கு வழங்­கிய தகவல் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறித்த லயன் குடி­யி­ருப்பை அண்­டிய பகு­தியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்­தி­யுள்­ளனர். இதன்­போது தட­யப்­பொ­ருட்­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

பூட்­டப்­பட்­டி­ருந்த  குடி­யி­ருப்பை சோத­னை­யிட்­ட­போது மேலும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான பல தக­வல்கள் கிடைக்­கப்­பெ­றவே நேற்று முன்­தினம் இரண்டு மணி­ய­ளவில் வலப்­பனை மாவட்ட நீதிவான் முன்­னி­லையில் குடி­யி­ருப்பின் புதி­தாக சீமெந்து இட­ப்பட்­டி­ருந்த பகுதி தோண்­டப்­பட்­டது.

சுமார் 3 அடி ஆழ­மான குழியொன்றிலிருந்து சடலம் மீட்­கப்­பட்­டது. சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வரின் கணவர் ஏற்­க­னவே இரண்டு பெண்­களை மணந்­துள்ளார். முத­லா­வது மனைவி வெளி­நாட்டில் தொழில் புரிந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

மீட்­கப்­பட்ட சடலம் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் 3 வயது பிள்ளையை பெரிய தாயிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேற்படி சம்பவம் பிரதேசத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.