(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. 2024 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இடம்பெற்ற அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் அரச இயந்திரத்தில் அரச சேவையாளர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள்.தற்போதைய நிலையில் அரச சேவையாளர்களால் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது வாழ்க்கை செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.ஆனால் வருமானம் ஒரு சதத்தில் கூட உயர்வடையவில்லை.
வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நான்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மாதத்துக்கு 74 ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.75 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் எத்தனை அரச சேவையாளர்கள் உள்ளனர்.
ஒரு பட்டதாரி அரச சேவையாளரின் அடிப்படை சம்பளம் 31 ஆயிரம் ரூபாவாக உள்ளது.அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு அரச சேவையாளர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்களும் பாதிக்கப்படுவார்கள்.
அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க ஒரு மாதத்துக்கு 133 பில்லியன் ரூபாவை செலவழித்து விட்டு,அரச சேவையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த சேவை தரப்பினரிடமிருந்து மாதாந்தம் 1094 பில்லியன் ரூபாவை வரி வருமானம் ஊடாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 74 ஆயிரம் ரூபா ஒரு மாதத்துக்கு தேவை என்று குறிப்பிடுகின்ற நிலையில் 10 ஆயிரம் ரூபா குறைந்தபட்ச கொடுப்பனவு ஒருபோதும் சாதகமாக அமையாது என்பதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரச சேவையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
பெருந்தோட்ட மக்கள் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டார்கள்.ஆனால் இன்று 1000 ரூபா ஒருநாள் செலவுகளுக்கு போதுமா? குறைந்தபட்சம் 2500 சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சேர்ப்புக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு முழுமையாக ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.இந்த தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2016 ஆம் ஆண்டு எடுத்தார்.இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் இன்று 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச சேவையில் ஈடுபடுகிறார்கள்.
கிராம சேவகர் சேவையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.2016 ஆம் ஆண்டு புதிய ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இடம்பெற்றது.பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.ஆனால் இன்றுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை.கிராம சேவகர் அலுவலகங்களுக்கு மாதாந்தம் வாடகையாக 2500 ரூபா வழங்கப்படுகிறது.தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 2500 ரூபா எந்தளவுக்கு போதுமானது.கிராம சேவையில் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
1997 ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படவில்லை.ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பல அரச சேவையாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரும் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட பகுதிகளில் பிரதேச சபைகளில் மொழி பிரச்சினை காணப்படுகிறது. தமிழ் மொழி பேசுபவர்கள் பிரதேச சபைகளில் இல்லாத காரணத்தால் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளில் இந்த பிரச்சினை காணப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட வேண்டிய தேவையில்லை.
பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.அடுத்த ஆண்டு தேர்தல்களை நிச்சயம் நடத்த வேண்டும் அப்போது தான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM