பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றமை பெரும் கவலையளிக்கும் விடயமாக மாறிவருகின்றது. அதி உயர் சபையான பாராளுமன்றம் தற்போது போராட்டக்களமாக மாறிவருகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக மாறி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருந்த சமயம் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அவரை தாக்க முயற்சித்ததுடன் அவர் கைவசம் வைத்திருந்த ஆவணத்தை பறித்தெடுத்து காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ உட்பட்டோர் மீது அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான வாத, விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றியிருந்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களான மஹிந்த, கோட்டா, பஷில் உள்ளிட்டோருக்கு பாராளுமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பிய அவர் அவர்களது குடியுரிமையை பறிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆளும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கும் வகையில் அவரது ஆசனத்துக்கு அருகே வந்து அச்சுறுத்தல் விடுத்தனர். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் கையிருந்த ஆவணங்களை ஆளும் தரப்பு எம்.பி.யும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த பறித்தெடுத்திருந்தார். இதனால் சபையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் சபை அமர்வுகளும் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
உண்மையிலேயே பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு ஒழுக்க விதிகளை மீறி நடந்துகொண்டமை பெரும் தவறான செயற்பாடாகும். அதி உயர் சபையில் எந்தவொரு உறுப்பினரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். அதற்கிணங்கவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றியிருந்தார். ஆனால் அவரது உரையை குழப்பும் வகையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்பட்டமையானது ஒழுங்கீனமான நடவடிக்கையாகவே அமைந்திருக்கின்றது.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குலும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது. இந்த விடயத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு விசேட பாராளுமன்றக் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கை தற்போது பாராளுமன்ற ஒழுக்க குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் தாக்குதல் நடத்துவதற்கு முற்படுவதும் இந்த காணொளியில் காண்பிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சிறுபிள்ளைகளைப் போல பேசிக்கொள்வதும் தாக்குதல் நடத்துவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலத்தில் பாராளுமன்றம் போர்க்களமாக மாறியிருந்தது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமித்திருந்தார். அவரது தலைமையில் புதிய அரசாங்கம் உருவாகியிருந்தது. ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தை நாடியிருந்தார். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பாராளுமன்றம் கூடியபோது பெரும் முரண்பாடான நிலைமை ஏற்பட்டிருந்தது.
பாராளுமன்றத்தில் கதிரைகள் தூக்கி வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சபாநாயகராக அன்று இருந்த கரு ஜயசூரிய கடும் தாக்குதலுக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் சபையைக்கூட்டி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமானது பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
தற்போதும் சபை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக செயற்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீதான தாக்குதல் முயற்சி அமைந்திருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக் ஷ உட்பட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான வாத, விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை பல தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதேபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா , நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 40 இலட்சம் மக்களை ஏழைகளாக்கிய ராஜபக் ஷர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகளின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக அடையாளம் காணப்பட்ட ராஜபக் ஷர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் நாட்டு மக்களுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென ஏன் உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று கேள்வியும் தொடுத்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் உரையின்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அன்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
இங்கு உரையாற்றிய மஹிந்த ராஜபக் ஷ ,எமக்கு எதிராக பொருளாதாரம் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நிதி தொடர்பான அனைத்து தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக சேறுபூசுபவர்கள் பின்னர் தமக்கு தாமே சேற்றை பூசிக்கொள்ள நேரிடும் என்று தெரிவித்திருந்தார்.
பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு எதிராக சபையில் பெரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நாம் நிராகரிக்கின்றோம். ஒவ்வொருவருடைய உரிமையையும் இல்லாதொழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் கடந்த காலங்களில் செயற்பட்டமை தொடர்பில் எமக்கு நினைவில் உள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேபோன்றே கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ எம்.பி. , அரசியலமைப்பின் 29 ஆவது சரத்துக்கு அமைய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அரச கொள்கைவகுப்பினை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவது பிரச்சினைக்குரியதாக உள்ளது. அன்று வரிகுறைப்புக்கு 225 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். ஆகவே தற்போதைய நிலைக்கு 225பேருமே பொறுப்புக்கூறவேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.
இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ ஆகியோரும் பதிலளித்திருந்தனர்.
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் உறுப்பினர்கள் கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்கவேண்டும். இதனைவிடுத்து கருத்து தெரிவிப்பவரை தாக்க முனைவதோ அல்லது அவரிடம் இருந்து ஆவணங்களை பறித்தெடுக்க முனைவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. பாராளுமன்றத்தின் கெளரவத்தை பேணி பாதுகாக்கும் வகையில் உறுப்பினர்கள் செயற்படவேண்டியது அவசியமாகவுள்ளது.
பாராளுமன்றத்தில் முறைகேடாக செயற்படும் உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவகையில் சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் தற்போது உணரப்படுகின்றது. எனவே இனியாவது அதி உயர் சபையின் கெளரவத்தை காப்பாற்றும் வகையில் மக்களின் பிரதிநிதிகளான உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM