விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'ஓரங்கட்டப்பட்ட சமூகத்துக்கான இளையோரின் குரல்' என்ற தொனிப்பொருளின் கீழ் மூதூர், சந்தனவெட்டை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவை கடந்த செவ்வாய்க்கிழமை (21) சந்தனவெட்டை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.
மூதூரில் பழங்குடிகள் அதிகமாக வாழும் சந்தனவெட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் அப்பகுதி மக்கள் தமது வளங்கள், வாய்ப்புக்களை அணுகும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாக உள்ளது. இதனால் அப்பழங்குடியினர் பிரதான சமூகத்துடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு.
இப்பகுதி மக்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பழங்குடிகள் என்ற குடியியல் ரீதியில் அவர்கள் தங்களை இந்நாட்டின் பிரஜைகளாக அடையாளப்படுத்திக்கொள்ள பொருத்தமான சட்ட ஆவணங்களை கொண்டிராதவர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில், அரசினால் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை பழங்குடியினர் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்பினை சரிவர பெற முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
அத்தோடு, தமது பழங்குடியின சமூகத்தின் எதிர்கால நிலையிருப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதை எண்ணி கவலையடைகின்றனர்.
மேலும், பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பின்மை, கல்வியின்மை, போசாக்கு குறைபாடு, பால்நிலை சார்ந்த ஒழுங்கற்ற சுகாதாரக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், சந்தனவெட்டை கிராமத்தின் பிரதான சமூகத்தினருடனான தொடர்பினையும், சேவை வழங்குநர்களை அணுகும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சம்பூர் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு உத்தியோகத்தர்கள், மூதூர் சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் பதிவாளர் கிளை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கம், மதத்தலங்களின் நிர்வாக உறுப்பினர்கள் என பல நிறுவனங்களும் அதிகாரிகளும் பொது மக்களும் இந்த சேவை நிகழ்வில் அங்கம் கொண்டனர்.
இதன்போது சந்தனவெட்டை கிராமத்து பழங்குடியினரின் அடையாள அட்டை மீளப் புதுப்பித்தல், பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவிடலுக்கான விண்ணப்பங்கள் பதிவிடப்படல் போன்ற பிரிவுகளில் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டன.
இவ்வாறு உரிய விண்ணப்பங்கள் பதிவாளரினால் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 3 விவாகப் பதிவிடல்கள் இடம்பெற்றன.
கிராமங்களில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் சுகாதார பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகரால் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பில் தெரிவித்த குடும்ப நல உத்தியோகத்தர் பீரவீனா, இளவயது திருமணம், இள வயதுக் கர்ப்பம், மந்த போசாக்கு தொடர்பாகவும் முக்கியமாக, பிள்ளைகளின் போசனை மட்டம் மிகவும் குறைந்துவிட்டமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான எமது வெளிக்கள விஜயங்களின்போது எம்மை அணுகுவதற்கு இங்குள்ள பெற்றோர்கள் விரும்புவதில்லை என குறிப்பிட்டார்.
அத்தோடு, பாடசாலை இடைவிலகலுக்கு இள வயது திருமணமும் ஒரு காரணம் என்றும் சில பெற்றோரின் இளவயது திருமணத்தையடுத்து பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளில் பிள்ளைகள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் இனிவரும் காலங்களில் இத்தகைய இடைவிலகலை குறைத்துக்கொண்டால் பழங்குடியின சமூகத்தின் மாற்றத்தினை விரைவுபடுத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் சேவை நிகழ்வுக்கு விழுது இளையோர்கள் தமது முழு ஒத்தழைப்பினை வழங்கி, அங்குள்ள பழங்குடி மக்கள் தமக்கான சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM