உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” ஏலம்

Published By: Digital Desk 3

25 Nov, 2023 | 12:04 PM
image

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.

அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும்.

குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக  ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

36 வயதான  லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்ததுடன், அதன் மூலம் கிடைக்கப்பெறும்  ஒரு தொகை பணம் சாண்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் வைத்தியாசாலையின் யுனிகாஸ் திட்டத்தின் மூலம் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறித்த ஏலம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி  டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நியூயோர்க் கிளையில் நடைடைபெறும்.

2022 ஆம் ஆண்டு டியாகோ மரடோனா 1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபோது அவர் அந்தப் போட்டியில் அணிந்திருந்த ஜேர்சி 9.3 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது. இது குறிப்பாக கால்பந்து விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஏல விற்பனையில் அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டு பொருளாக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"உலகக்கிண்ண கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. இது மெஸ்ஸியின் வீரம் நிறைந்த பயணத்துடன் பின்னிப் பிணைந்து  சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஆறு ஜேர்சிகளின் விற்பனை ஏல வரலாற்றில் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும். ரசிகர்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் சேகரிப்பாளர்களுக்கு மெஸ்ஸியின்  சாதனையுடன் தொடர்பை ஏற்படுத்தும்" என சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நவீன நினைவுப் பொருள் சேகரிப்புகளின் தலைவர் பிராம் வாச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்