'சொல்லிக்காட்டுங்கள்...' தவறில்லை!

Published By: Nanthini

24 Nov, 2023 | 03:48 PM
image

'சொல்லிக்காட்டுவது' நல்ல பண்பல்ல என்கிறார்கள்.

'செஞ்சதெல்லாம் சொல்லிக்காட்டிட்டியே.... இவ்வளவு நாளா இத்தனையும் மனசுல வெச்சிக்கிட்டுத்தான் என்னோட பழகுறியா?"

'செஞ்சத சொல்லிக்காட்ட வேணாமேன்னு பார்க்குறேன்..."

'இப்படி வரிசையா சொல்லிக்காட்டத்தானா அன்னைக்கு எனக்கு பாய்ஞ்சு பாய்ஞ்சு உதவி செஞ்ச...."

'நான் ஒருநாளாவது ஒனக்கு இதெல்லாத்தையும் சொல்லிக்காட்டியிருப்பேனா.....?"

இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் 'சொல்லிக்காட்டுவதை" பற்றி பேசியிருப்போம்.

சொல்லிக்காட்டுவது தவறான போக்கு என்கிற சிந்தனை பலரிடத்தில் உண்டு. செய்த உதவியை, நல்ல காரியத்தை மற்றவர் முன்னிலையில் சொல்வதொன்றும் முற்றுமுழுதாக தவறல்ல.

காதுக்கெட்டிய பக்கத்து வீட்டுப்புறளி ஒன்றை சொல்கிறேன்...  

அன்றைய தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருக்கிறார்கள்.

மனைவி எப்போதும் போல் வீட்டு வேலைகளை செய்கிறாள். கணவன் பொழுதையும் சோர்வையும் போக்கிக்கொள்வதற்காக அவ்வப்போது வீட்டு வேலைகளை செய்கிறான்.

ஒரு கட்டத்தில் சமையலறைக்குள் புகுந்து முழு சமையல் வேலையையும் கையிலெடுக்கிறான். மனைவி ஆடைகளை துவைத்துப் போட்டால் அவற்றை காயப்போடுகிறான். வீட்டை பெருக்குகிறான். நிலத்தை துடைத்து சுத்தம் செய்கிறான். பகலுணவை சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போட படுக்கைக்கு போய்விடுகிறான்.

மறுநாள் காலைப்பொழுதில் மனைவி கணவனிடம் கூறுகிறாள், "ரொட்டி போட கொஞ்சம் தேங்காய் துருவித் தாங்களேன்" என்று.

"ஷ்... ஐயோ.... என்னால முடியாது... நீயே துருவிக்கோ...." என்கிறான் கணவன்.

"ஏன்.... துருவிக் கொடுத்தாதான் என்னவாம்.... நேத்தெல்லாம் செஞ்சீங்க...."

"நேத்து செஞ்சேன்... சோம்பேறியா இருந்ததால ஒரு சேஞ்சுக்கு செஞ்சேன்.... அதுக்காக என்னை இன்னைக்கும் வேலை வாங்குவியா...?"

"ஏதோ ஒரு நாள் வேலை செஞ்சுட்டு பெரிய விசயமா பேசுறீங்க.... நானுந்தான் ஒவ்வொரு நாளும் வேலை செய்றேன்... இன்னைக்கு நானும் ஒரு சேஞ்சுக்கு எதுவும் செய்யாம சும்மா இருந்துட்டா நீங்க எப்டி சாப்பிடுவீங்க...? தட்டுல எப்டி சாப்பாடு வரும்?"

"வீட்ல இந்த கொஞ்ச வேலைகள செஞ்சுட்டு இவ்ளோ பேசுற. அப்டி என்னதான் வேல செய்ற...." என்ற கணவனை பார்த்து மனைவி அடுக்கடுக்காய் ஆரம்பித்தாள்.

"காலையில இருந்து ராத்திரி வரைக்கும் வீட்ல வேலை ஓயல. சமைக்கிறது, சட்டி பானை கழுவுறது, துணி தோய்க்கிறது, வீடு வாசல் கூட்டுறது, மறுபடியும் ராத்திரி சாப்பாட்டை கவனிக்கிறதுன்னு வீட்ல எல்லா வேலையையும் நாந்தானே செய்றேன். நீங்க செய்றீங்களா?

வீட்ல கொச்சிக்கா தூள், மசாலா தூள் இல்லன்னா வீட்டுக்கும் கடைக்கும் நா ஓயாம அலையறேன்... குப்பை வீச நானேதான் போகணும்.... உங்கள மாதிரி சும்மாவே இருந்தா எப்டி?" என்றாள் மூச்சு விடாமல்.

"நானுந்தான் வேலைக்குப் போய் கஷ்டப்படுறேன்.... இப்படித்தான் சொல்லிக்காட்டிட்டு இருக்குறேனா...."

"இப்ப வேலையில்லாம சும்மாதானே இருக்கீங்க.... எனக்கெங்க ரெஸ்ட் கிடைக்கிது...."

வாய்ச்சண்டையில் இருவருமே சளைக்காமல் மோதிக்கொண்டார்கள். நீண்ட நேர புயல் ஓய்ந்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக கூச்சல் குறைந்து, வீடே நிசப்தமானது.  

மனைவி தன்னைப் பற்றியும் தன் பணிகளை பற்றியும் அடுக்கடுக்காய் உரத்துச் சொல்வதை விரும்பாத கணவர்களில் அவனும் ஒருவன்.

நாள்தோறும், நாள் முழுவதும் ஒட்டுமொத்த வீட்டு வேலைகளையும் செய்கிற இல்லத்தரசிகளின் - மனைவிகளின் கணவர்களுக்கு ஒரு செய்தி.

மனைவி ஓயாமல் வீட்டு வேலைகளை செய்கிறாள்... அவள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு ஒருநாளேனும் ஓய்வெடுக்க நினைத்திருக்கிறாளா... ஓய்வெடுத்துக்கொண்டால், நம் நிலை என்னவாகும் என வேலைக்குச் செல்லும் பெரும்பாலான கணவர்கள் சிந்திப்பதேயில்லை.

மனைவியின் வீட்டுப் பொறுப்புக்களையும் அன்றாம் நிறைவேற்றி வரும் கடமைகளையும் பற்றி சிந்திக்காமல் நீ, நான் என்று கணவன் வாக்குவாதம் செய்யும் அந்த சில நிமிடங்களிலும் கூட, அவள் கைகள் ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டுதானிருக்கும்.

இல்லற கடமைகளில் ஆணுக்கு நிகரான பொறுப்புக்களை ஏற்றுள்ள இப்படிப்பட்ட மனைவிகள், தன் உழைப்பை பட்டியல் போட்டு சொல்லிக்காட்டுவதில் தவறில்லை.

திருமணமான நாளிலிருந்து குடும்பத்துக்காக தான் செய்த தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும் குறைத்து மதிப்பிடப்படும்போதும் கேள்விக்குட்படுத்தப்படும்போதும் மனைவி சொல்லிக்காட்டுவதில் என்ன தவறு?

கணவனாலும் பிள்ளைகளாலும் மற்ற உறவுகளாலும் அனுபவிக்கும் துன்பங்களை, இடையூறுகளை, கொடுமைகளை, மன கொதிப்புகளை சந்தர்ப்பம் வாய்க்கும்போது மனைவி சுட்டிக்காட்டினாலோ கொட்டித் தீர்த்தாலோ குற்றமாகிவிடுமா?

"நான் இல்லாவிட்டால் நீங்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கு பரிதவிப்பீர்கள். இந்த வீடு, வீடாக இருக்காது...." என்று சொல்வது உறவுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி, அவ்வளவுதான்!

'சூழ்நிலை எதுவாயினும், என் பணிகள் நிறைவேற்றப்படாத நாட்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்' என்ற முன்னறிவிப்பு.

செய்த உதவியை, உதவி பெற்றவர் மனதால் உணர்ந்து நன்றி கொண்டவராக வாழ்ந்தால், நீங்கள் சொல்லிக்காட்டுவதற்கு என்ன அவசியம் வரப்போகிறது?

ஒருவேளை, உதவி பெற்றவர் நன்றி கொன்றவராக இருந்தால், அவரிடத்தில் 'சொல்லிக்காட்டல்' தகாததல்ல.

சிலர் இருக்கிறார்கள்.... எப்போதோ ஒருமுறை ஒரேயொரு உதவியை செய்துவிட்டு வாழ்நாளெல்லாம் இடம், பொருள், சந்தர்ப்பம் பாராமல் சொல்லிப் பெருமை பாடுவார்கள். புகழ்ச்சியை அனுபவிக்கத் துடிப்பவர்களின் சொல்லிக்காட்டும் இந்த பண்பு சிறுபிள்ளைத்தனமானது.  

எனவே பெண்களே, சொல்லிக்காட்டுங்கள்... சுட்டிக்காட்டி புரிய வையுங்கள்.... வாதம் செய்யாமல் அமைதியாக இருந்து உணர்த்துங்கள்....

அன்பான உறவுகளாக இருந்தால் உங்களை உணர்வார்கள். இல்லையேல், காலம் அவர்களுக்கு உணர்த்தும்! ஆனால், சொல்லாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.

(இது வீடு, குடும்பம், உறவுகளுக்காக அக்கறை, அன்பு, நேர்மையாய் உழைக்கும் பெண்களுக்கு மட்டுமான வேண்டுகோள்!)

- நந்தினி 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்