2023இன் 9 மாதங்களுக்கு ரூபா 11.4 பில்லியன் தொகையை வரிக்கு முந்தைய திரட்டிய இலாபமாக மக்கள் வங்கி பதிவு செய்துள்ளது

23 Nov, 2023 | 06:12 PM
image

* திரட்டிய மொத்த வருமானம் 24.5% ஆல் அதிகரித்து ரூபா 345.2 பில்லியன்.

* வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு உட்பட்டு வெளிநாட்டு நாணய மதிப்பிலான முதலீடுகளுக்கு தொழில்துறையின் மிகக் குறைந்த வெளிப்பாடு மூலம் தொடர்ந்து பயனடைகிறது.

* மொத்த மூலதனப் போதுமை அளவு 15.7% உடன், சக வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அதன் திவாலாகும் நிலைமையைப் பொறுத்தவரை சிறந்த ஸ்தானத்தில் உள்ளது.

* கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்ட புதிய முயற்சிகள் தற்போது கணிசமான அளவில் நேர்மறைப் பலன்களைத் தருகின்றன. பல்வேறு சிறப்பம்சங்களின் மத்தியில் வெளிநாட்டில் தொழில்புரிவோர் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் சந்தைப்பங்கு மும்மடங்காகியுள்ளது. 

2023 செப்டெம்பர் 30இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான பெறுபேறுகளை மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளதுடன், மொத்த திரட்டிய செயல்பாட்டு வருமானம் மற்றும் வரிக்கு முந்தைய இலாபமாக முறையே ரூபா 67.6 பில்லியன் மற்றும் ரூபா 11.4 பில்லியன் தொகையை பதிவாக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டின் பெரும்பகுதியில், உயர் வட்டி வீதம் நிலவிய சூழ்நிலை காரணமாக கால வைப்புக்களுக்கான நிதி வழங்கலுக்கு அதிக செலவு ஏற்பட்டதால் 2023 செப்டெம்பர் 30இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான திரட்டிய தேறிய வட்டி வருமானம் ரூபா 44.6 பில்லியன் தொகையாக குறைவடைந்துள்ளது. 

திரட்டிய தேறிய கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம் ரூபா 10.8 பில்லியனாகக் காணப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டின் 9 மாதங்களின் போது விதிவிலக்காக ஒரு தடவை நிகழ்ந்த பரிவர்த்தனை நீங்கலாக, ஒப்பீட்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 9.0% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது.

பெரும்பாலும் 2022 இரண்டாவது காலாண்டு முதல் நிலவிய ரூபாவின் மதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் காரணமான செலவுகளில் ஏற்பட்ட அழுத்தங்களின் பிரதிபலிப்பாக, திரட்டிய மொத்த செயல்பாட்டு செலவுகள் 14.7%ஆல் அதிகரித்து, ரூபா 45.9 பில்லியனை எட்டியுள்ளது. இத்தகைய அதிகரித்த செலவு அழுத்தங்களுடன் ஒப்பிடுகையில், இது சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூடுதலான அளவில் செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வங்கி மற்றும் குழுமத்தின் பரந்த முயற்சிகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

மொத்த திரட்டிய வாடிக்கையாளர் வைப்புக்கள் 8.3%ஆல் அதிகரித்து, ரூபா 2,652.6 பில்லியனாக காணப்பட்டதுடன், திரட்டிய தேறிய கடன்கள் 5.4%ஆல் குறைவடைந்து, ரூபா 1,812.1 பில்லியனாக காணப்பட்டது. இது 2022ஆம் ஆண்டின் நிறைவில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது அதன் வெளிநாட்டு நாணயக் கடன் புத்தகத்தில் ரூபாயின் மதிப்பேற்றத்தின் தாக்கத்தை பிரதிபலித்ததுடன், மேலும் குறிப்பாக, இன்னும் அழுத்தத்திற்குள்ளாகிய நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு புதிய கடனை வழங்கும்போது வங்கி மேற்கொண்ட எச்சரிக்கையுடனான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளது. 

மொத்த திரட்டிய சொத்துக்கள் 2023 செப்டெம்பர் 30இல் ரூபா 3,131.7 பில்லியனானக் காணப்பட்டன.

வங்கியின் அடுக்கு I (Tier I) மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதங்கள் 2023 செப்டெம்பர் 30இல் முறையே 11.6% மற்றும் 15.7%ஆகக் காணப்பட்டதுடன், திரட்டிய அடிப்படையில் இவை முறையே 13.1% மற்றும் 16.8% ஆக காணப்பட்டன. 

வங்கி திவாலாகும் நிலைமைகளைப் பொறுத்தவரையில், அது தொடர்ந்தும் மிகவும் வலுவான ஸ்தானத்தில் காணப்பட்டதுடன், 2017 ஜூலை 01இல் Basel IIIஇன்  தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியான முயற்சிகளை வங்கி மேற்கொண்டுள்ளமையை இது காண்பிக்கிறது. அதன் ஒழுங்குமுறை மூலதனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை விடவும், குறிப்பிட்ட காலப்பகுதியில் அதன் பிரதான ஒழுங்குமுறை அளவீட்டு குறிகாட்டிகள் அனைத்தையும் வங்கி வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதுடன், குறிப்பாக ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயம் ஆகியவற்றின் மத்தியில் அதன் பணப்புழக்க விகிதங்கள் புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன.

சுஜீவ ராஜபக்ஷ (தலைவர், மக்கள் வங்கி) மற்றும் கிளைவ் ஃபொன்சேகா (பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், மக்கள் வங்கி)

வங்கி மற்றும் குழுமம் ஆகியவற்றின் பெறுபேறுகள் தொடர்பில் மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில், 

“நாட்டின் கண்ணோட்டம் தற்போது அதன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு, நிதி வலுவூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் பல முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் வெற்றி ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனையவற்றில் பல்வேறு ஐயப்பாடுகளுக்கு மத்தியிலும், எமது பன்முகப்பட்ட தயாரிப்பு வரிசை மற்றும் தனித்துவமான வழங்கல்கள், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எமது ஒட்டுமொத்த பெறுபேற்றுத்திறனுக்கு சாதகமான வழியில் பங்களிக்க எமக்கு இடமளித்துள்ளன. வங்கி மற்றும் ஈற்றில் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில், ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் தொழில்புரிவோர் நாட்டுக்கு அனுப்பும் பணத்தை மேம்படுத்துவதில் எமது முயற்சிகள் இவற்றுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 

2022இன் முற்பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அத்தகைய முயற்சிகள், 2022இன் முடிவில் அதன் சந்தைப்பங்கினை 6.0% இலிருந்து 18.0% ஆக அதிகரிக்க வழிகோலியுள்ளதுடன், பணம் அனுப்புவோர் வங்கியின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் இது சான்று பகருகின்றது.

எதிர்காலத்தை பொறுத்தவரையில், தொழில்நுட்பவியல் மேம்பாடு, ஆபத்து தணிவிப்பு, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முயற்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஒன்றிணைத்து, வரும் ஆண்டுகளில் எமது வங்கியை வெற்றிக்கான ஸ்தானத்தில் நிலைநிறுத்துவதற்கு இந்த மூலோபாயங்கள் உதவும் என நாம் திடமாக நம்புகின்றோம். சுருங்கச் சொல்வதாயின், நிலையான வலுவுடன், நாட்டில் மிகவும் நெகிழ்திறன் கொண்ட மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிதியியல் சேவைகள் வழங்குநராக மாற வேண்டும் என்பதே எமது இலக்கு” என்று குறிப்பிட்டார். 

வங்கியின் பெறுபேறுகள் குறித்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் திரு. கிளைவ் ஃபொன்சேகா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வெளிப்புற சூழல் ஏற்படுத்தும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், எமது செயல்பாட்டு திட்டத்தை செவ்வனே நிறைவேற்றுவதில் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஒவ்வொரு உள்ளக சிந்தனை மற்றும் தீர்மானம் வகுக்கும் நடைமுறையில் எமது டிஜிட்டல்மயமாக்கல் மூலோபாயம் தொடர்ந்தும் அவற்றின் மையமாக உள்ளது. 

இது வரையான காலப்பகுதியில் எமது பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான மேம்பாடு, எமது முக்கியமான சாதனைகளுள் ஒன்றாக காணப்படுவதுடன், பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், மிகவும் அவதானத்துடன் எமது கடன் துறையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

பொறுப்புள்ள ஒரு அரச நிறுவனம் என்ற வகையில், அனைத்து விடயங்களிலும் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தற்போதைய முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும், எமது வெற்றிகளையிட்டு திருப்தியடைவதுடன் நின்றுவிடாது, இதனை தொடர்ச்சியாகத் தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி, வங்கி வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவோம். 

எமது ஸ்தாபனத்தை எப்போதும் கட்டிக்காத்து, நீண்ட காலம் நீடிக்கும் வளர்ச்சி மற்றும் தேசியத்திற்கு பெறுமதியான பங்களிப்பை வழங்கும் வகையில் சிறப்பான ஸ்தானத்தில் அதனை திகழச் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்