சித்தர்களின் சிவ லிங்க இரகசியங்கள்!

22 Nov, 2023 | 03:34 PM
image

சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக இலிங்கம் வழிபடப்படுகிறது. இந்த இலிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

லிங்கத்திற்கு பலரும் பல பொருள்களை கூறுகின்றனர். ஆனால், திருமூலர் கூறும் விளக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

திருமூலர் தனது நூலான திருமந்திரத்தினுள் 6 வகையான இலிங்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.  

அவையாவன,

1. அண்ட லிங்கம் - உலகமே சிவம்

2. பிண்ட லிங்கம் - உடலே சிவம்

3. சதாசிவ லிங்கம் - உலக முதற்சிவம்

4. ஆதர்ம லிங்கம் - உயிர் சிவம்

5. ஞான லிங்கம் - உணர்வு சிவம்

6. சிவலிங்கம் - பொதுவான இறைவழிபாடு 

என்பவனவாகும்.

1. அண்ட லிங்கம்

அண்ட லிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும். அண்ட சராசரங்கள் அனைத்தும் இந்த லிங்க வடிவமாகும். உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் தோற்றுவித்தான். குண்டலி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. அண்ட கோள்களையும் இயக்குபவள் சக்தியாகும். அண்ட பிரபஞ்சத்தில் சக்தி இல்லை என்றால் உருவமான பிரபஞ்சமே இயங்காது. அந்த அண்ட லிங்கத்தோடு இருக்கும் மனோன்மணித் தாயை சித்தர்கள் அகில அண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றார்கள்.

2. பிண்ட லிங்கம்

பிண்ட இலிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும். உயிர் சக்தியாகும். உடல் லிங்கமாகும். ஆகாய வெளியிலிருந்து மனித உடம்பு வந்ததால் அதுவே சிதம்பரம் ஆகும். இவ்வுடம்பின் ஒவ்வொரு அசைவும் அவன் கூடும் திருக் கூத்தாகும். 

"மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுட ராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்து"  என்று திருமூலர் கூறுகின்றார்.

பிண்டத்தை சிவலிங்கமாக காண்பது, உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

3. சதாசிவ லிங்கம்

சதாசிவ லிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும். சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பெற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது. 

பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் எனும் இவர்களுக்கு மேலாக நின்ற மகேசனும் ஐமுகனாகிய சதாசிவனும், விந்துவான ஒளியும், நாதமாக ஒலியும், ஆதார சக்தியான பராசக்தியும், முடிவான சிவமும் இவையாவும் லிங்கத்திலேயே பொருந்தி நிற்பதால் இவை அனைத்தும் சதாசிவமாகும்.

4. ஆத்ம லிங்கம்

ஆத்ம லிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும். அகாரம் என்ற ஆகாயமாக விரிந்து அனைத்து உலகங்களிலும் அனைத்துப் பொருள்களிலும் இருப்பது சிவனாகும். 

உகாரம் என்ற காற்றாய் முதல் ஒலியாக உருவாகி அவை அனைத்திலும் உயிராக நிற்பது சக்தியாகும். இந்த அகாரம், உகாரம் என்ற இரண்டையும் நன்கு ஆராய்ந்து அறிந்தால் இந்த அகார, உகாரமே ஆத்மலிங்கமாய் நமக்குள் அமைந்து நிற்கும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

5. ஞான லிங்கம்

ஞான லிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும். உருவமும், அருவமும் உள்ள ஈசனை அறிவிக்க நம் உடம்பினுள்ளே தெய்வஞானமாய் அமர்ந்து தன்னை அறிந்த ஞானியார் அனைவருக்கும் தானே குருவாக வந்து மெய்ப்பொருளை உபதேசித்து நம் முன்னே இருந்து ஞானமாய் இருக்கும் உணர்வே ஞானலிங்கமாகும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம் என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

5. சிவலிங்கம்

சிவலிங்கம் என்பது பொதுவான இறைவழிபாட்டிற்குறிய அனைத்துமாக விளங்கும் சிவனை ஒருகுறியின் இடமாக எழுந்தருளச் செய்வது ஆன முறையை உணர்த்துவதாகும். 

அதாவது, பக்குவமில்லாத உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து, முறையாக இறைவனை உணர்வதற்கு ஒரு உருவம் தேவைபடுகிறது. அதனால், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அக்குறியிலும், எழுந்தருளியுள்ளான் என்று கூறுவதை நினைவில் கொண்டு, இறைவனை லிங்க வடிவில் வணங்கி நற்பேறுகளை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

- சித்தர் பாலகிருஷ்ண சுவாமிகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெய்வ திருவுருவங்கள்

2024-02-05 17:10:36
news-image

பிரேக் அப் ஆன காதல் கைக்கூடுவதற்கான...

2024-02-04 10:15:13
news-image

2024 பெப்ரவரி மாத ராசி பலன்கள் 

2024-02-01 17:39:40
news-image

கருக்கலைப்பு செய்திருந்தால் அதற்கான பரிகாரம்...!?

2024-02-01 15:40:52
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் ஆலய பரிகாரம்

2024-02-01 15:35:37