( ஆர்.யசி )

மாகாணங்களை தனித்து விடுவதன் மூலம் அரசியல் பயணம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

ஆளுநர்களின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படுமாயின்  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை பலப்படுத்தியாக வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி மாகாணசபை அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டால் நாட்டின் போக்கும் சிக்கலடையும்.  நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்  என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லை.

அதேநிலையில் மாகாணசபை அதிகாரங்கள் பலப்படுத்துவது தொடர்பிலும் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது. எனினும் மாகாணசபை அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு ஆளுநர்களின் அதிகாரங்கள் நீக்கப்படும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.