மக்கள் தங்களது உறவுகளைப் பேணுவதற்கு இடமளிக்கும் வகையில், சுவீடனில் ஒரு அதிர்ச்சி தரும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்தச் சட்டமூலம் அமுலுக்கு வரும் நிலையில், ஊழியர்களுக்கு கடமை நேரத்தின்போது ஒரு மணிநேர விடுமுறை அளிக்கப்படும், தத்தமது துணையுடன் உறவில் ஈடுபட!

ஓவர்டோனியா நகரசபை உறுப்பினர் பெர் எரிக் முஸ்கோஸ் (42) என்பவரே இந்தச் சட்டமூலத்துக்கான பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளார்.

“இன்றைய சமூகக் கட்டமைப்பின்கீழ், கணவன்-மனைவி இருவரும் தமக்கென அந்தரங்கமாக நேரத்தைச் செலவிட முடியாமல் இருக்கிறது. ஆனால், பாலுறவு என்பது ஆண்-பெண் இருவருக்கும் உடல் மற்றும் உளவியல் ரீதியில் மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. மேலும், இதன் மூலம் குடும்ப உறவுகளும் பலப்படும். 

“ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்படாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்புகிறேன். ஒருவேளை இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தபின், குறிப்பிட்ட ஒரு மணிநேரத்தை உறவுக்காகத்தான் பயன்படுத்துகிறார்களா, இல்லையா என்பது குறித்துக் கண்டறிய முடியாது. எனினும், நிறுவன அதிகாரிகள் தம் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து இதற்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும்.”

இவ்வாறு எரிக் தெரிவித்துள்ளார்.