நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டுவரும் போது பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் 70 சதவீதத்தை அதிகாரிகளின் வெகுமதிகள் மற்றும் நலன்புரிக்கு ஒதுக்கியமை தொடர்பிலும், இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோபா குழுவில் புலப்பட்டன.
இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நீர் அபிவிருத்தித் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட களஞ்சியத்தை விடுவிக்கும் போது போலியான உள்ளூர் தகவல்களை முன்வைத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி அனுகூலங்கள் தொடர்பில் கோபா குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினால் 5,139,621 அமெரிக்க டொலராக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை விடுவிப்பு செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் 6,350,364 அமெரிக்க டொலர் என பெறுமதியை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 1,210,743 டொலர் வரை மேலதிகமாக கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.அதன்படி இது தொடர்பில் ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கோபா குழு பரிந்துரை செய்தது.
இலங்கை சுங்கம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய தற்போது தரவுகளை பேணுவதற்கு புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்,அது ரமய்ஸ் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் சுங்கக் கட்டளைச் சட்டத் திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான திருத்தங்கள் 2024 ஜனவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வருகை தந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வரும்போது சரியான தகவல்களை வெளியிடாததால், குறைந்த கட்டணமாக அறவிடப்பட்ட சுமார் 187 மில்லியன் ரூபாய் வற் வரியை மீண்டும் அறவிடுவதற்கு மேற்கொண்ட சுங்க விசாரணையில் வற் வரியை மேலதிக வரியாக அறவிடாமல் 205 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து, அவ்வாறு பெறப்பட்ட தொகையில்70சதவீதத்தை அதிகாரிகளின் வெகுமதி மற்றும் நலன்புரிக்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பில் அதிகாரிகளிடம் குழு கேள்வி எழுப்பியது.
அதற்கமைய மீண்டும் இவ்வாறான விடயம் இடம்பெறாத வகையில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சுங்க அதிகாரிகள் கடமைக்கு அறிக்கையிடுவதற்கு கைரேகைகளை பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் இரகசியமான செயற்பாடுகளிலும் நடைமுறைச் சூழ்நிலைகளில் ஒரு சில செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கைரேகைகளை பதிவு செய்வது கடினமானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற முக்கியமான செயல்பாடுகளில் எழுத்துமூலமான பதிவைப் பயன்படுத்துமாறும், ஏனைய பொதுவான கடமைகளில் கைரேகைகளைப் பயன்படுத்துமாறும் கோபா குழு பரிந்துரைத்தது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசீலனை செய்வதற்காகக் கொள்வனவு செய்யப்பட ஸ்கேன் இயந்திரம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை அடைய முடியாமல் போனமைதொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய இது தொடர்பான முழுமையான அறிக்கையை கோபா குழுவுக்கு வழங்குமாறு குழு பரிந்துரை வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM